திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழைக்கு திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சி, குடிகுண்டா ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சமீபத்தில் குழந்தை நேசம் திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் 15 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியை சுற்றியும் மழை நீர் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, உடனடியாக பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், கழிப்பிடம், குடிநீர் வசதி செய்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post குடிகுண்டா ஊராட்சியில் பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.