×

மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை சார் உற்பத்தி கொள்கை; திருப்பூரை நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்: ஜப்பான் கண்காட்சியில் திருப்பூர் பின்னலாடைகள்


* 2025ம் ஆண்டில் ரூ40,000 கோடிக்கு வர்த்தகம் இருக்கும் என கணிப்பு
* டிரம்ப் பதவியேற்பு, வங்கதேச அரசியல் சூழ்நிலையால் 35% ஏற்றுமதி அதிகரிப்பு

பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் பெயர் பெற்றது திருப்பூர். ஏற்றுமதியில் ஆண்டுதோறும் ரூ36 ஆயிரம் கோடி, உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ30 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் ஈட்டி தருகிறது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அளித்து வருகிறது. 1930ல் தொடங்கிய திருப்பூர் ஜவுளி உற்பத்தி 1980ல் ரூ50 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்து கடந்த ஆண்டு ரூ35 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டியது. கடந்த சில ஆண்டுகளில் சாய ஆலைப்பிரச்னை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா பெருந்தொற்று, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு, கன்டெய்னர் தட்டுப்பாடு, சர்வதேச நாடுகளில் போர் சூழல், வங்கதேச நாட்டிற்கு அளித்த வரிச்சலுகை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் பின்னலாடை தொழில் மிகப்பெரும் சரிவை சந்தித்தது.

இருப்பினும் சர்வதேச சந்தையில் திருப்பூர் பின்னலாடை துணி வகைகளின் தரத்தின் காரணமாக இழந்த சந்தையை மீண்டும் பிடிப்பதில் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்தினர். இதன் பயனாக கடந்த 3 ஆண்டுகள் இல்லாத அளவு 2024ம் ஆண்டு சர்வதேச சந்தையில் திருப்பூர் தொழில் துறையினர் மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளனர். வங்கதேசத்திற்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையின் காரணமாக இந்தியாவிலிருந்து மூலப்பொருட்கள் பெற்று குறைந்த செலவில் துணிகள் உற்பத்தி செய்து குறைந்த விலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால், உள்நாட்டு சந்தையில் உற்பத்தி செய்யப்படும் துணிகளில் மதிப்பு மற்றும் வியாபாரம் குறைந்தது. நிலையில்லாத நூல் விலை காரணமாகவும் போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு சர்வதேச சந்தையில் ஆடைகளின் விலையை குறைக்க முடியாமல் தொழில்துறையினர் அவதி அடைந்தனர்.

இதற்கு தீர்வாக வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் அமைதியான வர்த்தக உறவை விரும்பும் நாடுகளுக்கு இந்தியா தீர்வாக அமைந்தது. இதன் காரணமாக இந்திய ஜவுளித்துறை சர்வதேச அளவில் மீண்டும் வளர்ச்சி பெற துவங்கியது. அதே நேரத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பருத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு கிடைத்ததன் காரணமாக கடந்த 9 மாதங்களில் 55 ரூபாய் வரை நூல் விலை குறைந்து ஏற்றுமதியாளர்களுக்கு கை கொடுத்தது.  பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் கவனம் பெற்று வந்த இந்தியா, செயற்கை நூலிழை ஆடைகளை உற்பத்தி செய்வதிலும் முனைப்பு காட்டியது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள தட்பவெப்ப சூழல், விலை குறைவு, விரைவான உற்பத்தி காரணமாக உலக நாடுகளில் செயற்கை நூலிழை ஆடைகளின் பயன்பாடு அதிகரித்தது.

இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடைத் துறையினரும் தங்கள் நிறுவனங்களில் 20% வரை செயற்கை நூலிழை ஆடைகளை உற்பத்தி செய்ய தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்தி உற்பத்தியை தொடங்கினர். இதன் காரணமாக, விளையாட்டு வீரர்களுக்கான சீருடை, மருத்துவ உபகரணங்கள் என கடந்த 10 ஆண்டுகளில் ரூ400 கோடி வரை செயற்கை நூலிழை ஆடைகளை ஏற்றுமதி செய்தனர். இன்னும் 5 ஆண்டுகளில் திருப்பூரிலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான பாலியஸ்டர் எனப்படும் செயற்கை நூலிழை ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பருத்தி, பாலியஸ்டர் இரண்டிலும் உற்பத்தியை அதிகரித்து வர்த்தகர்களுக்கு தேவையான புதிய வடிவம் மற்றும் புதிய டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதன் விளைவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய வர்த்தகர்களும் தங்கள் ஆர்டர்களை கொடுக்க முன் வந்தனர்.

குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை சார் உற்பத்தி கொள்கையை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். அதற்கேற்றவாறு திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ், மறுசுழற்சி, பசுமை சார் மின் உற்பத்தி உள்ளிட்ட வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்வதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகர்கள் நேரடியாகவே திருப்பூரில் உள்ள நிறுவனங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தங்கள் ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 95% ஊழியர்களுடன் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் ஒரு சில நாடுகளில் இருந்து வந்த போர் பதற்றம் தணிந்து சாதகமான சூழல் நிலவுவதால் பொதுமக்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வருகின்ற நாட்களில் இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதேபோல் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நட்பு நாடான இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘சர்வதேச நாடுகளின் சூழல் தற்போது திருப்பூர் பின்னலாடைத் துறையினருக்கு பல்வேறு வாய்ப்புகளை அளிக்க துவங்கியுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் அமைதியான மற்றும் நிலையான வர்த்தக உறவை விரும்பும் வர்த்தகர்களை திருப்பூரின் பக்கம் ஈரத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நட்பு நாடான இந்தியாவிற்கு கைகொடுத்துள்ளது. இதுவரை அமெரிக்காவிற்கு 20% வரை ஏற்றுமதி நடைபெற்றுள்ள நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்பின் சீன எதிர்ப்பு கொள்கைகளால் திருப்பூருக்கான பின்னலாடை ஆர்டர்கள் 10% அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்தியா, பிரிட்டன் மற்றும் இந்திய-அமெரிக்காவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் உள்ள நிலையில் விரைவில் இவை உடன்படிக்கையாக மாறும்போது தொழில் துறையினருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2024 செப்டம்பரில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2025ம் ஆண்டு ரூ40 ஆயிரம் கோடியையும், 2030ம் ஆண்டுக்குள் திருப்பூரின் ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி ரூ1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை அடைவதற்கான வாய்ப்பாக கருதி கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.

செலவினங்களை குறைக்க திட்டம்
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும்கூட உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றனர். இதற்கான செலவினங்கள் மற்றும் காலதாமதத்தை தவிர்க்க தமிழகத்திலேயே பின்னலாடை உற்பத்தி இயந்திரங்களை தயாரிக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் துணைக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இதேபோல் செயற்கை நூலிழை ஆடைகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய நிலையில் திருப்பூரிலேயே உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை தயார் செய்து வருகின்றனர். இதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதோடு உற்பத்திக்கான செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளனர்

திறன் மிகுந்த தொழிலாளர்கள்
திருப்பூர் மட்டுமல்லாது வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தினம் தோறும் புதிதாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பின்னலாடை நிறுவனங்களிலேயே தேவையான பயிற்சிகளை அளித்து திறன் மிகுந்த தொழிலாளர்களாக மாற்றி வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர். இதற்கு அடுத்த கட்டமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களை தொடங்கி அங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கி தொழிலாளர் பற்றாக்குறையை நீக்கி உற்பத்தியை பெருக்குவதற்கான பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சர்வதேச அளவில் பின்னலாடை வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஜவுளி கண்காட்சிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2025 ஜனவரி 15ம் தேதி தொடங்கி 3 நாட்கள் ஜப்பானின் டோக்கியோவில் இந்திய பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், ஒன்றிய அரசின் சிறப்பு மானியத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பசுமை சார் உற்பத்தி பின்னலாடைகளை காட்சிப்படுத்த உள்ளனர். இதேபோல், பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் ஜவுளி கண்காட்சிகளும் திருப்பூர் தொழில் துறையினர் தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்தி சர்வதேச வர்த்தகர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர்.

The post மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை சார் உற்பத்தி கொள்கை; திருப்பூரை நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்: ஜப்பான் கண்காட்சியில் திருப்பூர் பின்னலாடைகள் appeared first on Dinakaran.

Tags : US ,Tirupur ,Tirupur knitwear ,Japan ,exhibition ,Trump ,Bangladesh ,
× RELATED கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு...