×

ரூ.50 லட்சத்தில் கட்டிய தொட்டியில் லட்சுமி யானை உற்சாக குளியல்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

திருச்சி: மலைக்கோட்டை கோயிலில் ரூ.50 லட்சத்தில் கட்டிய தொட்டியில் லட்சுமி யானை உற்சாக குளியல் போட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் தினம்ேதாறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கோயிலில் லட்சுமி என்ற யானை உள்ளது. 30 ஆண்டுகளாக யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை லட்சுமிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் தேவதானம் காவிரி சாலை அருகே 60 சென்ட் இடத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. யானை மீது நீரை பீய்ச்சி அடிக்கும் வகையில் தொட்டியை சுற்றி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானை எளிதாக வந்து செல்லும் வகையில் குளத்தில் சறுக்கலுடன் சிமென்ட் மேடை, யானை தங்குவதற்காக தனியாக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு யானை குளியல் தொட்டியை திறந்து வைத்தார். இதையடுத்து குளியல் தொட்டிக்குள் இறங்கி லட்சுமி யானை உற்சாக குளியல் போட்டது. முசிறி அடுத்த குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ரூ.22 கோடி மதிப்பிலான திருப்பணியையும் அமைச்சர் சேகர் பாபு நேற்று துவக்கி வைத்தார். மேலும் ரூ.26.50 லட்சம் மதிப்பில் கோயில் நிதி மூலம் புதிதாக கட்டப்பட்ட பசுமட கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 12,595 கிராம் தங்கத்தை மும்பை உருக்காலைக்கு எடுத்து செல்வதற்கான ஆணையை வங்கியிடம் வழங்கினார். பின்னர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ரூ.11.30 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட புராதன நெற்களஞ்சியத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

The post ரூ.50 லட்சத்தில் கட்டிய தொட்டியில் லட்சுமி யானை உற்சாக குளியல்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Lakshmi ,Elephant Enthusiast ,Malaikot temple ,Tiruchi Malaikotta Thayumanava Swamy Temple ,
× RELATED சென்னை அண்ணா சாலையில் உள்ள...