×

மண்ணின் நிலையறிந்து உரங்களை பயன்படுத்த வேண்டும்

*மண்வள தினவிழாவில் வேளாண் இயக்குனர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் : மண்ணிலுள்ள சத்துக்கள் நிலையறிந்து அதற்கேற்றபடி உரங்களை பயன்படுத்தி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். நெற்குணம் கிராமத்தில் நடந்த உலக மண்வள தினவிழாவில் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாபு விவசாயிகளிடம் அறிவுறுத்தினார்.உலக மண்வள தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரம், நூத்தப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெற்குணம் கிராமத்தில், வேளாண்மைதுறையின் சார்பாக உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நூத்தப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மில்லர் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) பழனிச்சாமி முன்னிலை வகித்தார். முன்னதாக வேப் பந்தட்டை வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் அசோகன் வரவேற்றார்.பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாபு, பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி பேசியதாவது: விவசாயிகள் தங்கள் வயல்களில் உள்ள மண்ணின் வளம் குறித்து அறிந்துகொள்ள உரிய முறையில் மண்பரிசோதனை செய்து, மண்வள அட்டைகளைகொண்டு அதன் அடிப்படையில் உரம் இடவேண்டும்.

சமச்சீர் உரமேலாண்மை மூலம் பயிருக்குத் தேவையான உரசத்துக்களை வழங்கி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும். சமச்சீர் உர மேலாண்மைக்காக விவசாயிகள் பசுந்தாள் உரபயிர்களான சனப்பை, தக்கைபூண்டு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.மண்புழு உரம் இடுதல், தொழு உரம் இடுதல், உயிர் உரங்கள் இடுதல் மற்றும் போதுமான அளவிலான பேரூட்ட சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கான உரங்களை பயன்படுத்த வேண்டும்.

வேளாண்மை துறையின் மூலமாக அறி முகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்மண் வளம் இணைய தளத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் மண்ணிலுள்ள சத்துக்களின் நிலை அறிந்து அதற்கேற்றபடி தேவையான உரங்களை பயன்படுத்தி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் – மண்வள இயக்கத்தின் மூலமாக விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குதல், 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களில் தங்கள்பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவித்தார்.

இதில் பெரம்பலூர் வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம், வேப்பந்தட்டை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனபால், மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ரமேஷ், நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தயாநிதி, வேப்பந்தட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் துரைமுருகன், வேப்பந்தட்டை வட்டார ஆத்மா திட்ட பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மண்ணின் நிலையறிந்து உரங்களை பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Soil Day ,Perambalur ,Babu Farmer ,Department of Agriculture ,District ,World Soil Day ,Nehunam ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...