×

உடுமலை அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

*விவசாயிகள் வேதனை

உடுமலை : உடுமலை பகுதியில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

தென்னை, நெல் மற்றும் காய்கறி பயிர்களுடன்,அதிகளவில் விவசாயிகள் மக்காச்சோளமும் பயிரிடுகின்றனர். இந்நிலையில், காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டம், வனத்துறை நடத்தும் குறைதீர் கூட்டங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர்.காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். பலமுறை போராட்டங்களும் நடத்திவிட்டனர்.ஆனால் அரசு இதில் எந்த முடிவும் எடுக்காததால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து புறப்படும் காட்டுப்பன்றிகள் சுமார் 50 கிமீ தூரம் வரை பயணித்து ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசப்படுத்துகின்றன. இதை தடுக்க சேலை கட்டி வேலி அமைப்பது,இரவு முழுவதும் காவல் காப்பது என விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காட்டுப்பன்றிகள் வருவது நிற்கவில்லை.மாறாக, விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் ராட்சத காட்டுப்பன்றிகள் தோட்டங்களுக்குள் உலா வருகின்றனர்.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டு,அதனை காட்டுப் பன்றிக்கு தாரை வார்ப்பதை விட நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில் செய்யலாம் என விவசாயிகள் விரக்தியுடன் தெரிவித்தனர். உடுமலை அடுத்த வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்த விவசாயி காளிமுத்து என்பவர் ராகல் பாவி பிரிவு அருகே 10 ஏக்கரில் மக்காசோளம் சாகுபடி செய்துள்ளார். கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் இவரது வயலுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இதனால் மக்காச்சோளம் பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்காசோளம் சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 25000 செலவு செய்து பராமரித்து வருகிறேன்.மக்காசோளம் பயிர்களில் கதிர்கள் பிடித்து வருகிறது. இந்த சூழலில் காட்டுப் பன்றிகள் பயிர்களை தின்று அழிவை ஏற்படுத்துகின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

The post உடுமலை அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalai district ,Tirupur ,Karur ,Amaravathi dam ,Tirumurthy dam ,
× RELATED இன்ஸ்டா தோழி, நண்பருடன் சென்னை வாலிபர் குளத்தில் மூழ்கி பலி