×

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த சீன பூண்டு விற்பனையை ஆய்வு நடத்த வேண்டும்; உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர், டிச. 6: உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீன பூண்டு விற்பனை தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திட வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடு மற்றும் ஹோட்டல்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அன்றாட சமையலில் இடம் பிடிக்கும் பூண்டுக்கு அதிக அளவில் மருத்துவ குணங்கள் இருந்து வருகின்றன. மேலும் பூண்டு இல்லாமல் அசைவ உணவு வகைகளை சமைப்பது என்பது இயலாத காரியமாகும். அந்த வகையில் தமிழகத்தில் பூண்டு உற்பத்தி என்பது நீலகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் பயிரிடப்படுகிறது. மேலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தமிழகத்தில் பூண்டு உற்பத்தி இல்லை என்பதால் மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக பூண்டு தமிழக சந்தைகளுக்கு கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு தமிழகத்தின் உற்பத்தி மற்றும் வெளி மாநிலங்கள் இருந்து இறக்குமதி என விற்பனைக்கு கொண்டுவரப்பட்டாலும் சில நேரங்களில் இந்த பூண்டின் விலை என்பது ரூ 500யை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு ரூ 600 வரையில் விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது தமிழகத்தில் கிலோ ரூ 400 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் தங்களது தேவைக்கு ஏற்ப இந்த பூண்டினை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ குணம் வாய்ந்த இந்த பூண்டுக்கு போட்டியாக சீன பூண்டுகளின் விற்பனையும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த சீன பூண்டினை இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட போதிலும் தற்போது வரையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இந்த சீனப் பூண்டானது விற்பனை செய்யப்பட்டு தான் வருகிறது.

காரணம் இந்த சீன பூண்டு இல்லத்தரசிகளுக்கு உரிப்பதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால் இதனை விரும்பி வாங்கும் நிலை இருந்து வருகிறது. இருப்பினும் இந்த சீனப்பூண்டில் உடலுக்கு தீங்கு விளை விக்கக் கூடிய ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதால்கல் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் திருவாரூர் மாவட்ட த்தில் இந்த சீன பூண்டு விற்பனையை ஆய்வு செய்து தடை செய்திட வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த சீன பூண்டு விற்பனையை ஆய்வு நடத்த வேண்டும்; உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Food Safety Department ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்