×

கலெக்டர் அலுவலகத்தில் பணம் வாங்க வந்த நபரை மடக்கிப்பிடித்த போலீசார் வேலூரில் பரபரப்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி

வேலூர், டிச.27: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்க வந்த நபரை போலீசார் மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், டெய்லர். இவரது மகன் அஜித்குமார் (28). இவர் 10ம் வகுப்புவரை படித்துவிட்டு வேலை தேடிவந்தார். இவருக்கு தெரிந்த உறவினர் ஒருவர் மூலம் தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகமானார். அவர் அஜித்குமாருக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ₹3 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார்.

இதை நம்பி முதற்கட்டமாக அஜித்குமார் ₹80 ஆயிரம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் கூறியதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அஜித்குமாரை வரவழைத்தனர். அங்கு அந்த பெண் கூறியதாக தெரிவித்த ஒருவர், அஜித்குமாரிடம் சுயவிவர குறிப்பு, சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து ₹1.70 லட்சம் கொடுத்தால் பணி ஆணை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அஜித்குமாரும், அவரது தந்தையும் பணத்தை தயார் செய்வதாக கூறினர். அதன்படி நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பணத்துடன் தந்ைத, மகன் இருவரும் வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்துள்ளனர். அதற்கு அங்கிருந்த அரசு ஊழியர்கள், `அரசு வேலை எதுவும் காலியாக இல்லை, பணம் வாங்கிக்கொண்டு அரசு வேலை யாருக்கும் வழங்கப்படமாட்டாது, யாரோ உங்களை ஏமாற்றுகிறார்கள்’ என எச்சரித்தனர்.

இதனால் தந்தை, மகன் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் பணம் வாங்குவதாக தெரிவித்த நபர் கலெக்டர் அலுவலகம் வந்துவிட்டதாக இவர்களுக்கு செல்போனில் தெரிவித்தார். ஆனால் உஷாரான இருவரும் இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். அந்த நபரை பிடிப்பதற்காக போலீசார் மறைந்திருந்தனர். அங்கு வந்த அந்த நபர் அஜித்குமாரிடம் பணம் கேட்டார். அப்போது மறைந்திருந்த போலீசார் அந்த நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரை சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் தேனியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரும் தேனியை சேர்ந்த பெண்ணும் திட்டமிட்டு அஜித்குமாரிடம் பணம் பறித்தது தெரிந்தது. இதுதொடர்பாக அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் முதற் தவணையாக பெற்ற ₹80 ஆயிரம் ரொக்கம் யாரிடம் உள்ளது? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கலெக்டர் அலுவலகத்தில் பணம் வாங்க வந்த நபரை மடக்கிப்பிடித்த போலீசார் வேலூரில் பரபரப்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Venkatesan ,Venkatapuram ,Kudiyatham ,Ajithkumar… ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...