×

போலி நகைகள் அடகு வைத்து ₹2.88 கோடி மோசடி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில்

திருவண்ணாமலை, டிச. 27: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ₹2.88 கோடிக்கு போலி நகைகள் அடகு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, வங்கி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிழக்கு கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், சேமிப்பு கணக்கு மட்டுமின்றி, நகை அடமான கடன், பயிர் கடன், விவசாய கடன், சிறு தொழில் கடன் போன்றவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வங்கியில் ஆண்டு தணிக்கை கடந்த சில நாட்களாக நடந்தது. கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் வங்கியில் வழங்கப்பட்ட கடன் விவரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது, நகைக் கடன் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்ததில், போலி நகைகள் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 19 நபர்கள் அடகு வைத்த 151 நகைகள், கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. அதன் மூலம், ₹2.88 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நகைகளின் உண்மை தன்மை குறித்து நகைகளை சரிபார்க்கும் நபர்கள் மூலம் ஆய்வு செய்ததில் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, போலி நகைகளை திட்டமிட்டு அடகு வைத்து பணம் பெற்று இருக்கலாம் என்பது உறுதியானது. வங்கியில் பணி புரியும் அதிகாரிகளின்உடந்தயுடன் இந்த மோசடி நடந்ததா என துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு கிழக்கு கிளையின் மேலாளர் விஜி, உதவி மேலாளர் மற்றும் 3 உதவியாளர்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ஜெயம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 5 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக தொடர் துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் மிகக் குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கப்படுவதால், கவரிங் நகைகளை திட்டமிட்டு அடகு வைத்து இந்த மோசடி நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், நகை அடகு வைத்த 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான துறை சார்ந்த விசாரணையின் அறிக்கை கிடைத்ததும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள இந்த மோசடி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post போலி நகைகள் அடகு வைத்து ₹2.88 கோடி மோசடி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District Central Cooperative Bank ,Tiruvannamalai ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை தீபமலை உச்சியில் ஜோதி...