×

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் ராகிங் 3 மாணவர்கள் விடுதியிலிருந்து நீக்கம்

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரத்தில், 3 மாணவர்கள் விடுதியிலிருந்து நீக்கப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவன், டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவில் கடந்த 26ம் தேதி ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர்கள், எங்களை அவர்களுடைய `ரெக்கார்டு’ நோட்டுகளை எழுத வைத்தல், வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ராகிங் செயல்களில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரவிந்தன், ராகிங் சம்பவம் தொடர்பாக சீனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அனுப்ப முடிவு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் காவல்துறை உதவியுடன் விசாரணையை முன்னெடுக்குமாறு ராகிங் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து, அத்தகைய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் `ரெக்கார்டு’ எழுதி தருமாறு முதலாமாண்டு மாணவர்களை மூன்று சீனியர் மாணவர்கள் நிர்ப்பந்தித்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், விடுதியில் இருந்து அவர்கள் மூவரும் 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டனர். தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

The post ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் ராகிங் 3 மாணவர்கள் விடுதியிலிருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Omanturar Government Medical College ,CHENNAI ,Omanturar Government Medical College Hospital ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!