×

நெமிலி அருகே இன்று ராணுவ வீரரின் மனைவி, மகனுக்கு வெட்டு முகமூடி ஆசாமிகள் அட்டகாசத்தால் பரபரப்பு

நெமிலி: நெமிலி அருகே ராணுவ வீரரின் மனைவி, மகனை வெட்டிவிட்டு முகமூடி கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (41), ராணுவ வீரர். இவரது மனைவி அலமேலு (41), மகன் சோனு (13). ராஜேந்திரன், வடமாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அலமேலுவின் தந்தை தட்சிணாமூர்த்தி இவர்களது வீட்டில் தங்கியுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் முகமூடி ஆசாமிகள் 2 பேர், ராஜேந்திரனின் வீட்டின் அருகே நோட்டமிட்டனர்.

அவர்களில் ஒருவர் வெளியே நிற்க, மற்றொருவர் வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு, சோனுவின் கழுத்தில் கத்தியை வைத்து, நகை, பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சோனு சத்தம் போட்டார். அறையில் இருந்த அலமேலு ஓடி வந்து பார்த்து விட்டு கூச்சலிட்டார். ஆத்திரமடைந்த முகமூடி ஆசாமி, சோனுவின் கையை வெட்டினார். சிறிது நேரத்தில் தப்பிக்க முயன்ற ஆசாமியை அலமேலு விரட்டினார். அவரையும் வெட்டினார். விரல்களிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் கத்தியை வீசிவிட்டு முகமூடி ஆசாமியும் வெளியே இருந்த மற்றொரு முகமூடி ஆசாமியும் தப்பினர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த அலமேலு, சோனுவை மீட்டு அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ராஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், தப்பிய நபர்களை கைது செய்யக்கோரி பனப்பாக்கம்-ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெமிலி போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட ஆசாமிகளை பிடித்து கைது செய்வதாக உறுதியளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். போலீசார் அங்கிருந்த கத்தியை கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிந்து தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.

The post நெமிலி அருகே இன்று ராணுவ வீரரின் மனைவி, மகனுக்கு வெட்டு முகமூடி ஆசாமிகள் அட்டகாசத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nemili ,Asamigs Attakasath ,Rajendran ,Nedumbuli ,Ranipettai District Nemili ,Alamelu ,Sonu ,
× RELATED நம்மாழ்வார் விருது வழங்க நிலத்தில் மண் பரிசோதனை