×

ரூ.65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து சமுதாய நலக்கூடங்களும் டிசம்பர் 2025க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (3.12.2024) வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மண்டலம்-8, வார்டு-96, நியூ ஆவடி சாலை, காந்தி நகரில் ரூ.85.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய 500 எண்ணிக்கையிலான குடியிருப்புகளையும், எழும்பூர் சட்டமன்ற தொகுதி, மண்டலம்-8, வார்டு 108, சேத்துபட்டு, ஹாரிங்டன் சாலையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.10 கோடியில் கட்டப்படவுள்ள சமுதாய நலக்கூடத்தையும், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலம்-5, வார்டு-60, இராயபுரம், கிளைவ் பேட்டரியில் சிதலமடைந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்புகளையும், மண்டலம்-5, வார்டு-57, ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் ரூ.85.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய 504 குடியிருப்புகளையும் மற்றும் மண்டலம்-5, வார்டு-59, எல்லிஸ்புரத்தில் சிதலமடைந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்புகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவிலும், வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் கொன்னூர் நெடுஞ்சாலையிலும், சந்திரயோகி சமாதியிலும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் சென்ட்ரல் அவென்யூவிலும், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியிலும், மாதவரம் சட்டமன்ற தொகுதி, புழல் விளாங்காடுபாக்கத்திலும் என 6 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் எழும்பூர் சட்டமன்ற தொகுதி, சேத்துபட்டு, ஹாரிங்டன் சாலையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.10 கோடியில் சமுதாய நலக்கூடம் கட்டப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி அனைத்து சமுதாய நலக்கூடங்களும் டிசம்பர் 2025க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

அதில் முக்கியமான திட்டங்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், மக்களுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்ற வகையில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, காந்தி நகரில் சிதலமடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து ரூ.85.54 கோடி மதிப்பீட்டில் 500 எண்ணிக்கையிலான குடியிருப்புகளும் மற்றும் ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் சிதலமடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து ரூ.85.68 கோடி மதிப்பீட்டில் 504 எண்ணிக்கையிலான குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் இராயபுரம், கிளைவ் பேட்டரியில் சிதலமடைந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்புகளையும் மற்றும் எல்லிஸ்புரத்தில் சிதலமடைந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்புகளையும் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அவர்களும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர். சு.பிரபாகர், அவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

சிதலமடைந்த அனைத்து குடியிருப்புகளையும் மறுகட்டுமானம் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வேகம் எடுக்கின்ற பொழுது அனைத்து பணிகளும் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது ஏழை எளிய மக்கள் வறுமைக்கோட்டிற்கும் பொருளாதாரத்திலும் நலிவுற்று இருக்கின்ற மக்களுக்கு பேருதவியாக இந்த திட்டம் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர். சு.பிரபாகர், மண்டலக் குழுத்தலைவர்கள் கூ.பீ.ஜெயின், ஸ்ரீராமலு, சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் இளம்பருதி, சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார், செயற்பொறியாளர் விஜயகுமாரி, மண்டல அலுவலர்கள் சுரேஷ், பரிதா பானு, மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, எம்.இசட்.ஆசாத், பரிமளம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ரூ.65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Tamil Nadu ,Chief Minister ,CMDA ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை...