×

கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி அடுத்த கர்லப்பாக்கம், பாண்டேஸ்வரம், கீழ்கொண்டையார், மேல்கொண்டார், அரக்கம்பக்கம், பாலவேடு, கடவூர், மேட்டு தும்பூர், பாக்கம், மாகரல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்கள் நெல், கீரை காய்கறி, வேர்க்கடலை, மல்லிகைப் பூ உள்பட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். தற்போது சுமார் 200 ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நெற்பயிர் நன்றாக விளைந்து, கதிர்களை தள்ளி உள்ளது. இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்தவேளையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 23 செமீ வரை மழை வெளுத்து வாங்கியது. இதில், விளை நிலங்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் புகுந்து, நெற்கதிர்கள் முழுவதும் மூழ்கி சேதமானது. மேலும், தண்ணீரில் நெற்பயிர்களும் அடித்தும் செல்லப்பட்டன. நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்கதிர்கள் முளைக்கட்டும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் மக்கள் விவசாயத்தையே நம்பி பல ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த 2 மாதத்திற்கு முன் பல வகையான நெல் பயிர்களை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி வளர்த்தோம். தற்போது, நெற்பயிர்கள் கதிர் விட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்தவேளையில் பெய்த கனமழையால் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் எங்களுக்கு ₹75 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயத்தை செய்து வரும் எங்களுக்கு இந்த இழப்பு மிகவும் வேதனையை அளிக்கிறது. மேற்கண்ட கிராமங்களில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் குழு வந்து பார்வையிட வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மீண்டும் நாங்கள் விவசாயத்தை மேற்கொள்ள முடியும். எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சியில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதை அறுவடை செய்ய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. ேமலும், நெல் பயிர்கள் நீண்ட நாட்கள் மழைநீரில் கிடந்ததால் அழுகிவிட்டன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரை செலவு செய்து, கடந்த 4 மாதங்களாக நெற்பயிர் சாகுபடி செய்தோம். அறுவடை செய்ய ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திடீரென பெய்த மழையால் பயிர்களில் மழைநீர் தேங்கி அழுகியது. மேலும், பல நாட்களாக நெல் பயிர் தண்ணீரில் கிடந்ததால் மூளைத்தும் விட்டது. இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்றனர். அப்போது,  அழுகிய நிலையில் உள்ள நெல் பயிர்களை விவசாயிகள் வேதனையுடன் கையில் எடுத்து காட்டினர்….

The post கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Awadi ,Karlupakkam ,Pandeswaram ,Dumpadar ,Upper ,Lagambakkam ,Palaved ,Kadavur ,Madu Dumpur ,Pakkam ,Makaral ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்