×

தொடர்மழை காரணமாக மாகரல் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு : பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

காஞ்சிபுரம்: தொடர்மழை காரணமாக செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத. இதனால், பள்ளிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல் மற்றும் வெங்கச்சேரி ஆற்றின் குறுக்கே செய்யாறு பாய்ந்து ஓடுகிறது. மேலும், பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக செய்யாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால், ஆற்றின் கரையோரம் உள்ள நெய்யாடுபாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இளையனர்வேலூர் வள்ளிமேடு, காவாந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயின்று வருகின்றனர். செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின்பேரில், இளையனர்வேலூர் பகுதியில் கிராம சேவை கட்டிடத்தில் தற்காலிக பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின்போதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில், தற்போது இதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், வருகிற ஆண்டில் இதற்கான நிதி பெற்று உயர்மட்ட பாலம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கூறியுள்ளார். இதுபோன்ற உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டால் உத்திரமேரூரில் இருந்து வாலாஜாபாத்துக்கு குறைந்த நேரத்தில் செல்லவும், இப்பகுதிக்கு மிகுந்த போக்குவரத்து கிடைக்கும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

* சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அணுமந்தண்டலம் மற்றும் மாகரல் அணைக்கட்டு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து, வினாடி 23 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. எனவே, பெருநகர், மாகரல் காவல்துறையினர் பொதுமக்கள் நலன் கருதி, அனுமந்தண்டலம் அணைக்கட்டு மற்றும் பெருநகர் மேம்பாலம், மாகரல் அருகே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர்மழை காரணமாக மாகரல் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு : பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Magaral river ,Kanchipuram ,Magaral ,Venkachery ,Walajahabad Circle, Kanchipuram District ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...