×

பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் திமுக எம்.பி கனிமொழிக்கு எதிராகவும் டிவிட்டர் பதிவு; பாஜ நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சென்னை: பெரியார் சிலை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தும் டிவிட்டரில் பதிவிட்ட வழக்குகளில் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார். 2018 ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக டிவிட்டரில் அவதூறு கருத்து கூறியிருந்தார். இதையடுத்து, பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க நிர்வாகிகள், தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.

கனிமொழி தொடர்பான டிவிட்டர் பதிவு புகாரில் ஈரோடு நகர காவல்துறையும், பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் எச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்குமாறு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. எச்.ராஜா தரப்பில், பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று பதிவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. எம்.பி.கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து.

அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 41 பக்கங்கள் மற்றும் 24 பக்கங்கள் அடங்கிய இரண்டு தீர்ப்புகளில், ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என்று குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பெரிய அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவர் தனது அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவர் பதிவு செய்தது பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அப்போதுகூட அவர் மறுக்காமல் மவுனமாக இருந்துள்ளார்.

இரு பதிவுகளும் எச்.ராஜவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்கள் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே, எச்.ராஜா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. கனிமொழி மீது அவதூறு பரப்பிய வழக்கில் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், பெரியார் சிலையை உடைப்பேன் என்ற பதிவு மீது தொடரப்பட்ட வழக்கில் 6 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தனித்தனியாக 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதையடுத்து, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று எச்.ராஜா தரப்பில் கோரப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதி மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

The post பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் திமுக எம்.பி கனிமொழிக்கு எதிராகவும் டிவிட்டர் பதிவு; பாஜ நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Twitter ,DMK ,Kanimozhi ,Periyar ,BJP ,H. Raja ,Madras ,Chennai ,Tamil Nadu ,Special Court of Madras ,H.Raja ,Chennai Special Court ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் விவகாரம் – திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்