×

ஐயப்பன் அறிவோம் தெய்வப்பிறவி 19

குருநாதர் பயிற்சியின் படி மணிகண்டன் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், அனைத்து கலைகள் என கல்வி, வேள்வியை சிறப்பாக கற்று, வில் வித்தை, வாள் வீச்சு, குதிரையேற்றம் என அனைத்திலும் கை தேர்ந்தவராக திகழ்ந்தார். மணிகண்டனின் கல்வி நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு குருவை அரண்மனைக்கு வரச் சொல்லி சந்திக்கிறார் மன்னர். மணிகண்டன் முழுமையாக கற்று தேர்ந்து விட்டார். எனவே ராஜகுமாரனுக்கு குருகுல கல்வியை நிறைவு செய்யலாம். அவர் சாதாரண மனித பிறவியாக தெரியவில்லை. தெய்வீக குழந்தையாக தெரிகிறார் என சில அற்புத நிகழ்வுகளை எடுத்துரைக்கிறார் குரு. தனக்கு பிறகு நாட்டை ஆள சிறந்த ராஜகுமாரன் கிடைத்துள்ளான் என கருதிய மன்னர், குருகுலத்தை நிறைவு செய்வதற்குள் அரசாட்சி குறித்து கற்றுக் கொடுப்பதற்காக தனது அரசவையின்போது, மணிகண்டனை உடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

மணிகண்டனும் அரசவை நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்குகிறார். சிறுவயதிலேயே பக்குவப்பட்ட சிறந்த அறிவையுடைய மணிகண்டனின் நடவடிக்கையால் மகிழும் மன்னர், 11 வயது பூர்த்தியடைந்த மணிகண்டனை அரசவையில் நிரந்தரமாக கூட வைத்துக்கொள்ள தீர்மானிக்கிறார். இதனால் மணிகண்டனை, தனது மந்திரியுடன் அனுப்பி குரு காணிக்கையை செலுத்திவிட்டு வரும்படி அனுப்பி வைக்கிறார்.
மணிகண்டனை தனியாக சந்தித்த குரு, ‘‘மணிகண்டா… நீ சாதாரண மனித குழந்தை அல்ல… குருவாக இருந்தாலும், உன் தன்மையை முழுவதும் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. ஆனால், நீ தெய்வப்பிறவி என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

ஒரு குருவால் மாணவனுக்கு பெருமை ஏற்படுவது வழக்கம் என்றாலும் கூட, ஒரு மாணவனால் குருவிற்கு பெருமை என்ற நிலை ஏற்பட்டு, உன் வரலாற்றில் எனக்கும் ஒரு முக்கிய இடம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கை உன்னால் எனக்கு கிடைப்பது மட்டும் நிச்சயம்’’ என கூறுகிறார். இதனை கேட்ட மணிகண்டன், தெய்வமானாலும், குரு முக்கியமானவர் என்பதால் எதையும் மறைக்கக் கூடாது என்ற நியதிக்கு ஏற்ப, ‘தாங்கள் கூறுவது உண்மை. அப்படியே நடக்கும்’ என்கிறார்.சுவாமியே சரணம் ஐயப்பா (நாளையும் தரிசிப்போம்).

The post ஐயப்பன் அறிவோம் தெய்வப்பிறவி 19 appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Manikandan ,Gurunath ,
× RELATED பொருளாதார மேம்பாட்டில் பெரும் பங்கு;...