சமாதானத்தின் சின்னம், அன்பின் அடையாளம், அழகுக்கு உதாரணம், காதலர்களின் தபால்காரன், ராணுவத்தின், ராஜ்ஜியத்தின் உற்றத்தோழன்… இப்படி எல்லாம் புறாக்கள் அழைக்கப்படுகின்றன; வர்ணிக்கப்படுகின்றன. அதன் அழகை, புத்திசாலித்தனத்தை, தூது செல்லும் திறமையை வியக்காதவர்கள் இல்லை. இதன் பெருமைகள் பலப்பல. இலக்கியம் முதல் மத நம்பிக்கை வரை, அனைத்து இடத்திலும் இடம் பெற்றுள்ளது. கிறிஸ்துவம் உள்ளிட்ட சில மதங்களில் கடவுளின் தூதராகவும் போற்றப்படுகிறது.
சகாரா பாலைவனம், ஆர்க்டிக், அண்டார்டிகா உள்ளிட்ட சில கடுமையான பருவநிலைகளை கொண்ட பிரதேசங்களில் மட்டுமே இது கிடையாது. மற்றபடி, உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. நாய், பூனை, குரங்கு, காக்கை, குருவிகள் போன்று இதுவும் மனித இனத்தோடு பாசத்தோடு ஒன்று சேர்ந்து வாழும் ஓர் உயிரினம். எந்த உயிரினத்துக்கும் ஒரு பிறப்பிடம் உண்டு. புறாவுக்கு அது இல்லை. ஆனால், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அதை மனிதன் வளர்க்க தொடங்கி விட்டான் என்கிறது வரலாறு. உலகம் முழுவதிலும் 344க்கும் மேற்பட்ட புறா வகைகள் உள்ளன.
இருந்தாலும், ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றுள்ளன. இவை பண்டைய காலத்தில் இருந்தே மனிதர்களுடன் தொடர்பு கொண்டு செய்தி அனுப்புதலுக்கு மட்டுமின்றி, சிறந்த சக்திமிக்க, மருத்துவ குணமிக்க உணவாகும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு, செல்லப் பிராணியாகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. 2ம் உலகப் போரின் போது கூட, தூது சென்று ஏராளமான உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளன. சுருக்கமாக, புறாக்கள் மனிதர்களுடன் நீண்ட நெடிய நெருங்கிய வரலாற்றைக் கொண்ட, பன்முகத்தன்மை வாய்ந்த, புத்திசாலித்தனமான பறவையாகும்.
இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட இந்த பறவைக்கு மற்றொரு கொடூர முகமும் உள்ளது. அது, தன்னை நேசித்து வளர்க்கும் மனிதர்களின் உயிரையே பறிக்கக் கூடிய பயங்கரமான நோய்களை பரப்பும் தன்மை கொண்டது. இதன் காரணமாக, உலகளவில் புறாக்களை கூட்டமாக வளர்ப்பதற்கும், பொது இடங்களில் உணவு அளிப்பதற்கும் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. புறாக்களின் எச்சங்கள், இறகுகள் நோய்களை பரப்பும் வல்லமை கொண்டவை. இவை மனிதர்களுக்கு ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ், கிரிப்டோகாக்கோசிஸ், சிட்டாக்கோசிஸ் போன்ற பூஞ்சை, பாக்டீரியா நோய்களைப் பரப்புகின்றன.
இவை பெரும்பாலும் புறாக்களின் காய்ந்த எச்சங்களில் இருந்து பறக்கும் தூசியை சுவாசிப்பதன் மூலம் ஏற்படுகின்றன. மேலும், சால்மோனெல்லா, ஈ.கோலை போன்ற நோய்களையும் பரப்புகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் ஆபத்தானது.
* புறாக்கள் மூலம் பரவும் நோய்கள்:
ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ்: புறா எச்சங்களில் வளரும் பூஞ்சையால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்.
கிரிப்டோகாக்கோசிஸ்: பூஞ்சையால் ஏற்படும் மற்றொரு சுவாச நோய், இது கிரிப்டோகாக்கஸ் நியோபார்மன்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
சால்மோனெல்லா: இது, புறா எச்சங்கள் மூலம் உணவு, நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் அவை விஷமாகி மனிதர்களை
* தாக்கும் நோய்.
ஈ கோலை: புறா எச்சங்கள் நீர் அல்லது உணவுடன் கலக்கும்போது பரவக்கூடிய நோய்.
காம்பைலோபாக்டீரியோசிஸ்: காம்பைலோபாக்டர் ஜெஜூனி பாக்டீரியாவால் ஏற்படும் நோய்.
பறவை பராமரிப்பாளர் நுரையீரல் நோய்: புறாக்களின் எச்சங்களில் உள்ள புரதங்களின் மூலமாக ஏற்படும் ஒவ்வாமை நோய்.
இந்த நோய்கள் பல நாடுகளில் பல மனித உயிர்களை பலி வாங்கி உள்ளன. ஆனால், அதற்கான துல்லியமான புள்ளி விவரங்கள் இல்லை. இந்தியாவில் 2004ம் ஆண்டு வரையில் 13 பேர் இறந்திருப்பதாக ஆதாரப்பூர்வமற்ற ஒரு தகவல் உள்ளது. தமிழகத்திலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை மீனாவின் கணவரும், புறா வளர்த்ததால் நோய் தாக்கி இறந்தது பேசுபொருளாக இருந்தது. அது, சமூகத்தில் புறாக்களால் ஏற்படும் ஆபத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
புறாக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் இந்த நோய்களின் வீரியத்தை அறிந்ததால்தான், இந்தியாவில் சில மாநிலங்களில் அவற்றுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை தடை செய்து வருகின்றன. இப்போதைக்கு கர்நாடகா, மகாராஷ்டிராவில் மும்பையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு புறாக்களால் பெரும் இடையூறுகளும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. இந்த காரணங்களுக்காகவும் அங்கு அரசே தடை விதித்துள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிக்கும் இடங்களில் மட்டும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே புறாக்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மும்பையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், சில குறிப்பிட்ட பகுதிகளில் புறாக்களுக்கு உணவளிப்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.
மும்பையில் நீதிமன்றம் விதித்த தடையால், ‘‘கபுதர்கானா” எனப்படும் பிரபலமான புறா உணவளிக்கும் இடங்கள் மூடப்பட்டன. இதற்கு பறவை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இதுபோன்ற அதிகாரப்பூர்வ தடை எதுவும் விதிக்கப்படவில்லை. டெல்லியில் பொது இடங்களில் புறாக்களுக்கு அதிகளவில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஆபத்தை உணர்ந்துள்ள டெல்லி மாநகராட்சி, இதற்கு தடை விதிப்பது பற்றி நீண்ட காலமாக பரிசீலித்து வருகிறது.
ஆனால், இன்று வரையில் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கவில்லை. காரணம், டெல்லியில் விலங்குகள், பறவைகள் நல ஆர்வலர்கள் அதிகமாக உள்ளனர். தெருநாய்களை காப்பகத்தில் அடைக்கும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், புறாக்களுக்கு தடை விதித்தால் அதற்கும் போராட்டங்கள் நடைபெறும். இருந்தாலும், புறாக்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை தவிர்க்கும்படி மக்களை டெல்லி மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
சாலைகள், நடைபாதைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மொட்டை மாடிகளில் உணவளிக்க வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் புறாக்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதற்கு தடை விதிப்பது, ஒரு முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக அமையும் என்பது பொதுவான, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ஏற்கனவே பாதிப்புகள் வந்து விட்டது; அது மேலும் அதிகமாகாமல் தடுப்பது நல்லது அல்லவா?
* ஒரு புறா ரூ.16 கோடி
பந்தய புறாக்களுக்கு உலகளவில் பெரும் கிராக்கி உள்ளது. தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியத்தை சேர்ந்த 2 பந்தய புறாக்களுக்கு வரலாறு காணாத வகையில் அதிக விலை கிடைத்துள்ளது. ‘அர்மாண்டோ’ என்ற புறா, கடந்த 2019ம் ஆண்டில் ரூ9.7 கோடிக்கு விற்கப்பட்டது. அதேபோல், ‘நியூ கிம்’ என்ற புறா ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டது. பொதுவாக, பந்தயங்களில் வென்ற புறாக்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.
* ஒடிசா காவல் துறையில் இப்போதும் புறா படை
பண்டைய காலங்களில் அரசர்கள், ராணுவத்தினர் தகவல்களை விரைவாக அனுப்ப புறாக்களைப் பயன்படுத்தினர். ஆங்கிலேயேர் காலத்தில் இருந்தே இந்தியாவில், குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் கடந்த 1946ம் ஆண்டில் இருந்தே புறாக்கள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து வருகிறது.
உலகளவில் இந்த நடைமுறை அழிந்து விட்ட போதிலும், இந்த மாநில காவல் துறை இப்போதும் 150 தூது புறாக்கள் அடங்கிய படையை பராமரித்து, மலை பகுதிகளுக்கு இயற்கை பேரிடர், வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் அவசர தகவல்களை அனுப்ப பயன்படுத்தி வருகிறது. இவை ‘ஹோமிங் புறாக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
* 100 கிமீ முதல் 1,000 கிமீ வரை புறா பந்தயத்தின் மையம் சென்னை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புறா பந்தயம் நடத்தப்படுகிறது. இதில், லட்சங்கள் முதல் கோடிகள் வரை பணம் புரள்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தான் புறா பந்தயம் மிகவும் பிரபலம்,. சென்னை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், ராமநாதபுரம் போன்ற நகரங்களில் பரவலாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் புறா போட்டிகள் நடத்துவதற்கு என்றே, பல்வேறு பகுதிகளில் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சேலம் முன்னணி வகிக்கிறது. திருச்சி, தஞ்சாவூரிலும் பாரம்பரியமான மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் புறா பந்தயம் 1940ம் ஆண்டுகளில் புறா பந்தயம் பிரபலமாக தொடங்கியது. அப்போது, கொல்கத்தாவில் அதிகம் பிரபலமானது.
* மற்ற நாடுகள்
இந்தியாவில் மட்டுமின்றி, வங்கதேசம், பாகிஸ்தான் (கராச்சி, பெஷாவர்), சீனா, இந்தோனேஷியா ஈரான், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளிலும் புறா பந்தயம் பிரபலமாக நடத்தப்படுகின்றன. புறாக்களை குறிப்பிட்ட தூரங்களுக்கு (100 கிமீ முதல் 1,000 கி.மீ வரை) எடுத்து சென்று, பழைய இடத்துக்கே அவை எவ்வளவு நேரத்தில் திரும்பி வருகிறது என்பதை கணக்கிட்டு, வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ‘ஹோமர்’ போன்ற குறிப்பிட்ட சில புற இனங்கள் மட்டுமே பந்தயத்திற்காக வளர்க்கப்படுகின்றன.
* புறா என்பது லத்தீன் வார்த்தையான பிபியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு வார்த்தை. இதன் பொருள் ‘எட்டிப் பார்க்கும் குஞ்சு’ என்பதாகும்.
* புறாக்களின் சராசரி ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள். மனித தலையீடு, வேட்டையாடுதல் போன்ற பல காரணிகளைப் பொறுத்து, இது 3-5 ஆண்டுகளாக சுருங்கி விடும். இல்லை என்றால், 15 ஆண்டுகள் கூட வாழும் என சொல்லப்படுகிறது.
* புறாக்களால் 6 ஆயிரம் அடிக்கு அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் பறக்க முடியும்.
* அவை சராசரியாக மணிக்கு 77.6 மைல் வேகத்தில் பறக்கும். சில பந்தய புறாக்கள் மணிக்கு 92.5 மைல் வேகத்தில் பறப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
* ஒரே நாளில் 600 முதல் 700 மைல்கள் பயணிக்க கூடியவை. உதாரணத்துக்கு, 19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து இடையே அதிகபட்சமாக 55 நாட்கள் பறந்து, 7 ஆயிரம் மைல்கள் கடந்துள்ளது.
* பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து, தான் சேர வேண்டிய இடத்தை துல்லியமாக அடையாளம் கண்டு பறக்கக் கூடிய அசாத்திய திறமை படைத்த ஒரே பறவை இதுதான்.
* கொன்றால் 7 ஆண்டு சிறை
இந்தியாவில் புறாக்களைக் கொல்வது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். காரணம், இவை அட்டவணைப்படுத்தப்பட்ட பறவை இனங்களில் ஒன்றாக உள்ளது. புறாக்களை துன்புறுத்தினாலோ, கொன்றாலோ, வேட்டையாடினாலோ ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்க முடியும். இது மாநில சட்டங்களைப் பொறுத்து மாறுபடும். இன்னும் சொல்லப் போனால், புறாக்களால் நமது சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றை கொல்வதற்கு அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும்.
* நாகூர் தர்கா பகுதியில் புறாவுக்கு தனி கிராமம்
தமிழகத்தில் புறாக்கள் அதிகம் காணப்படும் இடங்கள் என்று குறிப்பிட்ட பகுதிகளை குறிப்பிட்டு சொல்வது கடினம். இருப்பினும், தமிழ்நாட்டிலேயே நாகூர் தர்கா பகுதியில் புறாக்களுக்கு என்றே தனி கிராமம் இருக்கிறது. நகரங்களில் உள்ள சதுக்கங்கள், பூங்காக்கள், மசூதிகள், ஆலயங்கள் போன்ற ஆன்மிகத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் புறாக்கள் அதிகம் காணப்படுகின்றன. சென்னையில் மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரையில் அதிகளவில் புறா கூட்டத்தை காண முடிகிறது. மக்கள் உணவு அளிப்பதால், அந்த இடங்களில் புறாக்கள் அதிகமாக கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
* காற்று மாசுவையும் கண்டு பிடிக்குமாம்
இன்று நவீன தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும், சில இடங்களில், துறைகளின் தேவை இன்றியமையாததாக இருந்து வருகிறது. குறிப்பாக, காற்றின் மாசை கண்டறியும் ஆய்வுகளுக்கும் தூசு புறாக்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.
* நோய்களை தீர்க்கும் ஆற்றல் மிக்க உணவு
புறா கறி அதிக புரதம், குறைந்த கொழுப்பு, இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, டி, இ மற்றும் ஜிங்க், செலினியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடல் வலிமை, ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, இருதய ஆரோக்கியம், இரத்த சோகை, சோர்வு, வாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது, மேலும், உடலுக்கு வெப்பத்தை தருகிறது. புறாவின் கறி உடலின் செல்களை சரி செய்யவும், புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது;
உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கிறது. உடல் சோர்வை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாரம்பரிய மருத்துவத்தில் காசம், சளி, வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், கொழுப்பை கட்டுப்படுத்தவும் பரிந்துரை செய்யப்படுகிறது. இரத்த சோகை , தலைச்சுற்றலுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
* முன்னெச்சரிக்கை
* நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள, புறாக்களிடம் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும்.
* புறாக்கள் தங்கும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்து, கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* புறாவின் எச்சங்கள், இறகுகளை சுத்தம் செய்த பிறகு, கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.
* வீடுகளில் புறாக்கள் கூடு கட்டுவதைத் தடுக்க, வலைகளை அமைக்கலாம்.
* தடுப்பது எப்படி?
புறாக்களின் எச்சங்கள் படிந்த பகுதிகளை கவனமாகக் கையாள வேண்டும். அவற்றை சுத்தம் செய்வதற்கு முன்பாக, அதன் மீது தண்ணீரை ஊற்றி நனைய வைக்க வேண்டும். அப்போதுதான், அதை சுத்தம் செய்யும் கிருமிகள் கொண்ட தூசுக்கள் பறக்காது. இதை சுத்தம் செய்யும் போது, என்-95 முகக்கவசத்தையும், கையுறைகளையும் கட்டாயம் அணிய வேண்டும்.

