×

திருத்தணியில் புயல் காற்றில் விழுந்த மரம் வெட்டி அகற்றம்: வீட்டின் மேற்கூரை சேதம்

திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், பள்ளிப்பட்டு-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், கல்பட்டு பகுதியில் சுமார் 50 ஆண்டு பழமையான புளியமரம் திடீரென சாலையின் நடுவே முறிந்து விழுந்தது. அந்நேரத்தில் அவ்வழியே வாகன ஓட்டிகள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் நரசிம்மன் தலைமையில் ஜேசிபி இயந்திரம் மற்றும் மரம் வெட்டும் கருவிகளுடன் ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி, புளியமரத்தை முழுமையாக வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் நெற்பயிர் மற்றும் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை, உளுந்து, பச்சைப் பயறு உள்பட பல்வேறு பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட மேற்கு தெருவை சேர்ந்தவர் கவுரி (67). சீமை ஓடு வேய்ந்த பழைய வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றினால் கவுரி வசித்து வந்த வீட்டின் மேற்கூரை திடீரென உடைந்து நொறுங்கியது. இதில், வீட்டுக்குள் இருந்த கவுரி உள்பட அவரது குடும்பத்தினர் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

The post திருத்தணியில் புயல் காற்றில் விழுந்த மரம் வெட்டி அகற்றம்: வீட்டின் மேற்கூரை சேதம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Palliptu-Solingar ,Kalpattu ,Thiruthani ,Dinakaran ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு