×

‘தயவு செய்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்’ இறந்த மாணவனின் தந்தை பள்ளி வகுப்பறையில் கண்ணீர்

*மாணவர்களும் கண் கலங்கினர்

கடலூர் : தயவு செய்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள் என்று இறந்த மாணவனின் தந்தை மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளி வகுப்பறையில் கண்ணீர் விட்டபடி கதறினார். இதைக்கண்ட அங்கிருந்த மாணவர்களும் கண்கலங்கினர்.கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த மாணவன் கைலாஷ் கடந்த 27ம் தேதி தேதி மாலை பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் தவறி கீழே விழுந்தார். இதில் மாணவரின் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் நேற்று முன்தினம் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அமர்நாத், கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா ஆகியோர் சாலை விபத்தில் மரணமடைந்த மாணவன் கைலாஷின் தந்தை கண்ணதாசனை புனித வளனார் பள்ளிக்கு வரவழைத்தனர். பின்னர் சாலை விபத்துக்கள் மற்றும் சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது தொடர்பாக சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் விபத்தில் இறந்த மாணவன் கைலாஷின் தந்தை மகனை நினைத்து திடீரென கதறி அழுதார். அப்போது, ‘தயவு செய்து மாணவர்கள் பஸ் படியில் பயணம் செய்யாதீர்கள், உயிரை இழந்து விடாதீர்கள்’ என கூறி கை கூப்பியபடி பள்ளி வகுப்பறையில் விழுந்து கதறி அழுதார். இதனை பார்த்து மாணவர்கள் அனைவரும் கண் கலங்கினர். இதையடுத்து போலீசார் கண்ணதாசனை தேற்றினர். பின்னர் மாணவர்கள், ‘இனிமேல் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்ய மாட்டோம்’ என உறுதியளித்தனர். இந்த வீடியோ சமூவலை வைரலாக தலங்களில் பரவி வருகிறது.

The post ‘தயவு செய்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்’ இறந்த மாணவனின் தந்தை பள்ளி வகுப்பறையில் கண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Manjakuppam ,St. Valanar School ,Dinakaran ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகள் உடல் மீட்பு