×

தரக்குறைவாக கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம்.. குறைபாடுகளைக் கண்டறிந்த பின்னும் ரயிலை இயக்க அனுமதியா?

ராமநாதபுரம்: பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ரூ.545 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களுடன் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக கப்பல் கடந்த செல்ல ஏதுவாக 27 மீட்டர் உயரத்தில் 77 மீட்டர் நீளத்தில் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நவ.13, 14ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாலம் கட்டுவதற்கான திட்டமிடும் பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தனது அறிக்கையில் சவுத்ரி தெரிவித்து இருக்கிறார்.

ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரத்துக்கு ஏற்ப செங்குத்தாக உயரும் 77 மீட்டர் நீள தண்டவாளம் அமைக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள சவுத்ரி, தூக்குப்பாலம் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு விவரங்கள் ஆர்.டி.எஸ்.ஓவிடமே இல்லை என தெரிவித்துள்ளார். விசாரணையில் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பொறுப்பை உதறியிருக்கிறது ஆர்.டி.எஸ்.ஓ. தரமற்ற கட்டுமான பணிக்கான பளுவை தாங்கும் திறன் 36% குறைந்து விட்டதாக ஆணையர் கூறியிருக்கிறார்.

கட்டுமானத்துக்கு முன் தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல், தான் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியம் மீறியிருப்பதாக சவுத்ரி குற்றச்சாட்டி இருக்கிறார். பாலம் காட்டும் இடத்திற்கு சென்று வெல்டிங் தரத்தை தெற்கு ரயில்வேயின் கட்டுமான ஆய்வுக் குழு சோதனை செய்யவில்லை எனவு புகார் கூறியிருக்கிறார். கடல் பாலம் காட்டுவதால் ஏற்படும் அரிப்பு சேதம் குறித்து கவனம் செலுத்ததால் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே தூண்களில் அரிமானம் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே வாரிய கட்டுமானப் பிரிவு அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் அரிமானத்தைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்க வில்லை என அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

புதிய ரயில் பாலம் தரக்குறைவாக இருப்பதைக் கண்டறிந்த பிறகும் பாலத்தில் தூக்கு இருக்கும் பகுதியில் மட்டும் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், மற்ற இடங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில்களை இயக்க நிபந்தையுடன் நிபந்தையுடன் அனுமதி அளித்துள்ளார் ஏ.எம்.சவுத்ரி. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரே புதிய பாலம் குறித்து அடுக்கடுக்காக குறைபாடுகளை கூறியுள்ளதால் பாம்பன் பாலத்தில் ரயில் இயங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

The post தரக்குறைவாக கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம்.. குறைபாடுகளைக் கண்டறிந்த பின்னும் ரயிலை இயக்க அனுமதியா? appeared first on Dinakaran.

Tags : New Pompon Bridge ,Ramanathapuram ,Bombon Railway Bridge ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு கணவர் உடலை தானமாக வழங்கிய மூதாட்டி