திருப்பூர்: சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் அருகே வந்த போது திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆந்திரா மச்சிலிப்பட்டினம் செல்லும் சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. கார்த்திகை மாதம் தொடங்கியதால் சபரிமலை சென்ற ஆந்திர பக்தர்கள் ஏராளமானோர் இந்த ரயிலில் பயணம் செய்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகே ரயில் வந்த போது மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு அருகே புகை வெளியேறியது. அதிக புகை எழுந்ததைக் கண்ட பயணிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். பயணிகளின் சத்தத்தை கேட்ட டிக்கெட் பரிசோதகர் உடனடியாக ரயில் ஓட்டுநனருக்கு தகவல் கொடுத்தார்.
அப்போது, ரயில் திருப்பூர் அடுத்துள்ள வஞ்சிப்பாளையம் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர், பயணிகள் கீழே இறங்கி வந்து மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் தீ எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும், ரயிலில் இருந்த தீயணைப்பான்கள் மூலம் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பெட்டியின் அருகே சக்கரம் மற்றும் பிரேக் இடையே இருந்த ரப்பர் உரசி தீ பற்றி அதிலிருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. உடனடியாக ரயிலை நிறுத்தி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், 30 நிமிடம் தாமதமாக ரயில் வஞ்சி பாளையத்திலிருந்து மச்சிலிப்பட்டினம் நோக்கி சென்றது.
The post கேரளாவில் இருந்து திருப்பூர் வந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.