×

வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

*சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிப்பு

ஊட்டி : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் விதி திருத்தம் செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், விஏஓ ஆகிய நிலைகளில் இருந்து பதவி உயர்வு தடைப்பட்டுள்ளது.

இதற்கு உரிய தீர்வு கண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான மறைமுக தடையை நீக்க வேண்டும். அரசு சிறப்பு திட்டங்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு தேக்க நிலையை களைதல் வேண்டும். முழு புலம் பட்டா மாறுதல் வழங்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 29ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. இதன் அடுத்த கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பணிகளை புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் 6 தாலுகாக்களில் பணிபுரியும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை சார்ந்த ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

ஜனாதிபதி வருகை காரணமாக அப்பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் தவிர்த்து மற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

The post வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Revenue Officer Association ,
× RELATED பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி 2 பேர் உயிரிழப்பு