×

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு போர் நினைவு தூணில் ஒத்திகை

குன்னூர் : ஜனாதிபதி திரெளபதி முர்மு குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நாளை வருகை தரவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் வெலிங்டன் போர் நினைவு தூணில், ராணுவ அதிகாரிகளின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.ஜனாதிபதி திரௌபதி முர்மு அரசு முறை பயணமாக இன்று (27ம் தேதி) ஊட்டி வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார். ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கும் அவர், நாளை (28ம் தேதி) சாலை மார்க்கமாக குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் முன்பு அமைந்துள்ள போர் நினைவு தூணில், இந்திய போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்துகிறார்.

அதற்கான பாதுகாப்பு ஒத்திகையை நேற்று ராணுவ அதிகாரிகள் நடத்தினர். வெலிங்டன் போர் நினைவு தூணில் ராணுவ பயிற்சி மையத்தின் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி நிகழ்ச்சி குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவருக்கு எவ்வாறு வரவேற்பு அளிப்பது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட எஸ்பி நிஷா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகையை முன்னிட்டு ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு போர் நினைவு தூணில் ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : War Memorial Pillar ,Coonoor Military Training College ,Coonoor ,President ,Draupadi Murmu ,Military Training College ,Wellington War Memorial ,Dinakaran ,
× RELATED குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில்...