×

ஊட்டியில் கொட்டும் நீர் பனியால் குளிர் அதிகரிப்பு; மக்கள் அவதி

ஊட்டி : ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனி கொட்டுவதால் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும், அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனி விழ துவங்கும். இச்சமயங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படும்.

மேலும், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகளும் பாதிக்கும். குறிப்பாக, பனிக்காலத்தில் தேயிலை செடிகளே அதிகளவு பாதிக்கும். இந்த நீர் மற்றும் உறைப்பனியில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வாடிக்கை.

வழக்கம் போல் கடந்த இரு மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் புல் வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர் செடிகளில் நீர் பனி கண்ணாடி இழைகள் போல் காட்சியளிக்கிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா காமராஜர் சாகர் அணை, சூட்டிங் மட்டம், குதிரைப் பந்தயம் மைதானம் போன்ற பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் இன்று அதிகாலை நீர் பனி அதிகளவு காணப்பட்டது.

ஊட்டி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் நீர் பனி கொட்டி வருவதால் தேயிலை விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இரு நாட்களாக குளிரும் அதிகரித்துள்ளது.

இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் காலை நேரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். காலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிரால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

The post ஊட்டியில் கொட்டும் நீர் பனியால் குளிர் அதிகரிப்பு; மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Awadi ,
× RELATED ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில்...