*வேடிக்கை பார்க்க சென்ற பெண்ணும் தவறி விழுந்து சாவு
காரிமங்கலம் : காரிமங்கலம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிந்து பலியானார். சம்பவத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற பெண்ணும் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், காளப்பனஅள்ளி ஊராட்சி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். கீரியூர் பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (50) என்பவர் கிணறு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று பணியின்போது வெடி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து கிணற்றின் பக்கவாட்டில் மண் சரிந்தது. அதை அப்புறப்படுத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக மண் சரிந்தது. இதில் தொழிலாளி பச்சியப்பன் மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கிணறு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் பச்சியப்பனை சடலமாக மீட்டனர். தகவலறிந்த அக்கம் பக்கம் விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் அங்கே சென்றனர். அப்போது அங்கு சென்ற பெரியாம்பட்டி அருகே உள்ள விருதானூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி முருகம்மாள்(51) என்பவர் கிணற்றை எட்டிப் பார்த்தார்.
அவரும் திடீரென, தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிந்து பலியான நிலையில், அவரை பார்க்க சென்று பெண்ணும், அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post காரிமங்கலம் அருகே சோகம் கிணறு வெட்டிய தொழிலாளி மண் சரிந்து விழுந்ததில் பலி appeared first on Dinakaran.