×

அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: அதிமுக பொதுக்குழு, நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்தேன். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு நான் அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே, என் மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன், ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Election Commission ,ICourt ,CHENNAI ,Chief Election Commission ,Dinakaran ,
× RELATED 24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு