×

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மரக்காணம், நவ. 26: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வானிலை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். இதனால் மீனவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் மறு உத்தரவு வரும் வரையில் யாரும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க கூடாது என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வலைகளையும் தனியாக எடுத்து வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாக இருக்கும். இதனால் சிறிய வகை மீன்களின் விலை அதிகரிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

The post வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Marakkanam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...