×

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வருக்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் நன்றி

சென்னை: திருச்செந்தூர் திருக்கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் கடந்த 18.11.2024 அன்று திருக்கோயில் யானை தெய்வானை தாக்கியதில் யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்லையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (24.11.2024) திருச்செந்தூருக்கு சென்று திருக்கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் உதயகுமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 லட்சம், திருக்கோயில் சார்பில் ரூ. 5 லட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சார்பில் ரூ. 3 லட்சம் என ஆக மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், அவரது உறவினர் சிசுபாலனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 லட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சார்பில் ரூ. 3 லட்சம் என ஆக மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி, அக்குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் உத்தரவின்படி, உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் திருக்கோயில் பணியாளர் என்பதால் அவருடைய மனைவிக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல் திருக்கோயிலில் பணி நியமனமும், சிசுபாலனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (25.11.2024) தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் திருச்செந்தூர் கிளைத் தலைவர் பால்ராஜ் தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் திருச்செந்தூர் திருக்கோயில் செயல் அலுவலர்/ இணை ஆணையர் ஞானசேகரன் அவர்களை சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறியதுடன் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அதற்கு பேருதவியாய் இருந்திட்ட மா மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கடிதம் அளித்தனர்.

The post திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வருக்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Masters Temple Employees Association ,Tiruchendur ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,MLA ,Thiruchendoor temple ,K. ,Tamil Nadu Masters Temple Workers' Association ,Stalin ,Arulmigu Subramaniya Swami Temple Complex ,Thiruchendur ,Trinachendoor Temple Elephant Attack ,Tamil Nadu Masters Temple Staff Association ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...