×

ஊட்டியில் உறைபனி சீசன் துவங்குவதற்கு முன்பாக முட்டைகோஸ் பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதற்கு அடுத்த படியாக மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலைக்கு அடுத்தப்படியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகவும், பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது.

நீலகிரி காய்கறிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கோடப்பமந்து, ஆடாசோலை, புதுமந்து, கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மாத பயிரான முட்டைகோஸ் பயிரிட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் முட்டைகோஸ் பயிர்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. கிலோவிற்கு அதிகபட்சமாக ரூ.35 வரை விலை கிடைத்தது. அதன்பின் சில நாட்கள் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது முட்டைகோஸிற்கு கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை நல்ல விலை கிடைத்து வருகிறது. இங்கு விளையும் முட்டைகோஸ் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்படுவது மட்டுமின்றி அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கப்பல் மூலம் அனுப்பப்படுகிறது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பருவமழை சீசன் ஏறக்குறைய முடிவுக்கு வந்த நிலையில், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நீர்ப்பனி பொழிவு காணப்படுகிறது. வரும் நாட்களில் பனிப்பொழிவு தீவிரம் அடைந்து உறைப்பனி பொழிவு கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறைப்பனி பொழிவின் போது நன்கு விளைந்த முட்டைகோஸ் பயிர்கள் சேதமடையும் என்பதால் மகசூல் இழப்பை தடுக்கும் விதமாக ஊட்டி அருகே ஆடாசோலை, தேனாடுகம்பை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள முட்டைகோஸ்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post ஊட்டியில் உறைபனி சீசன் துவங்குவதற்கு முன்பாக முட்டைகோஸ் பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில்...