×

அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டை முன்னிட்டு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களாட்சி தத்துவத்தை உள்ளடக்கி இந்திய திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அம்பேத்கர் வடிவமைத்து தந்த நமது அரசியலமைப்பு சட்டமாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Offices ,Educational Institutions ,CHENNAI ,Chief Minister ,M.K. ,Stalin ,
× RELATED நிதிகளுக்கான காசோலை வழங்கல்