சென்னை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்படாத கோடைக்கால தொடர் வகுப்புகளின் வாயிலாக பயின்ற எம்.பில் உயர்கல்வி படிப்பு, முழு நேர எம்.பில் உயர்கல்விப் படிப்பு தகுதிக்கு இணையானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வுக்கு உயர்கல்வித் தகுதிக்கான சான்றிதழை வழங்குவார்கள். அவ்வாறு வழங்கும் உயர்கல்வித் தகுதிக்கான சான்றிதழ் குறித்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பட்டப்படிப்புகளுக்கு இணைத் தன்மை வழங்குவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்கல்வித் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்படாத கோடைகால தொடர் வகுப்புகளின் வாயிலாக பயின்ற எம்.பில் உயர்கல்வி படிப்பு, முழு நேர எம்.பில் உயர்கல்விப் படிப்பு தகுதிக்கு இணையானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த நடவடிக்கையின் போது இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அழகப்பா பல்கலையில் எம்.பில் படிப்பு உயர்கல்வி தகுதிக்கு இணையானது அல்ல: பள்ளிக்கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.