×

கேளம்பாக்கம் அருகே பரபரப்பு அட்டை கம்பெனியில் தீவிபத்து: அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே அட்டைபெட்டி கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தை சேர்ந்தவர் அஜீத். இவருக்கு, சொந்தமான அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் கிராமத்தின் ஓஎம்ஆர் சாலையில், பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ளது.

இந்த, தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு பகுதியில் மின் கசிவின் காரணமாக அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் தீப்பிடித்தது. அதை அணைக்க ஊழியர்கள் முயற்சித்தபோது, தீ மளமளவென பரவியது.
இதையடுத்து, ஊழியர்கள் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர்.

இதுகுறித்து சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுசேரி, திருப்போரூர், மாமல்லபுரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயினை முழுவதுமாக அணைத்தனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா, தீயணைப்பு பணிகளை பார்வையிட்டார்.

இந்த, தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், தொழிற்சாலையில் இருந்த பல கோடி மதிப்பிலான அட்டை பெட்டிகள், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கேளம்பாக்கம் அருகே பரபரப்பு அட்டை கம்பெனியில் தீவிபத்து: அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Senshu Cardboard Company ,Kelambakkam ,Tiruporur ,Ajith ,Tambaram ,Senkanmal ,Dinakaran ,
× RELATED கேளம்பாக்கம் அருகே காணாமல்போன சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு