×

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உருவாக்கும் முன்மாதிரி மையம்: ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் முன்னோடியாக உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் பெருந்தொற்றுகள், நோய்க்கடத்திகள் வாயிலாக பரவும் நோய்கள், கடலோரப்பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக, பழங்குடியினர் வாழும் பகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் அதிக இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரின் நல்வாழ்வை பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் முன்னெச்சரிக்கை வாய்ந்த அணுகுமுறை அவசியமாகிறது. அந்தவகையில் ‘ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்’ உருவாக்கியிருப்பது, காலநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு, காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளக்கூடிய வகையிலான ஒரு சுகாதார அமைப்பு முறையை உருவாக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தின் நோக்கம் பின்வருமாறு:
* ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்கும்: பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களை கருத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தால் உருவாகும் உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்கும்.

* துறைகளுக்கிடையிலான இணக்கத்தை அதிகரிக்கும்: தரவு மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக, சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், பேரிடர் மேலாண்மை துறை போன்ற துறைகளுடனான இணக்கத்தை அதிகரிக்கும்.

* திறன்களை மேம்படச் செய்யும்: சுகாதார பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர், ஒருங்கிணைந்த நல்வாழ்வு குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காகவும் அது குறித்த விழிப்புணர்வு பெற வேண்டியும் அவர்களுக்கு ஒருங்கிணைந்த நல்வாழ்வு குறித்த பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யும்.

* பசுமை சுகாதார உட்கட்டமைப்பு: சூரிய ஒளி ஆற்றலால் செயல்படும் தகடுகள் மற்றும் எரிசக்தி சேமிப்பு திறன்மிகு அமைப்புமுறைகள் போன்று காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளக்கூடிய அமைப்பு முறைகளை உடைய மறுசீரமைப்பு மருத்துவமனைகள் அமைக்க வழிவகை செய்யும்.

* காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் தொடர்பான நோய்களை கண்டறிதல்: இந்த மையம் சுகாதார பிரச்னைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை கண்டறிவதற்கு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இதில், விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், நோய் கடத்திகள் வாயிலாக பரவும் நோய்கள், வெப்பதாக்கம் தொடர்பான நோய்கள், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் மற்றும் நீர் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை புவியியல் ரீதியாக பரவுவதை அறிந்துக்கொள்வதாகும். இந்த மையம், காலநிலைச் சூழ்நிலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களின் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுத்துவதற்கான மாதிரிகளை உருவாக்குவதற்கு செயல்படும்.

* மையத்திற்கான அமைப்பு முறை: இந்த மையத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமை வகிப்பார். தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் செயலாளராகவும், தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் நிர்வாக இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இயக்குநர் , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இதன் உறுப்பினர்களாவர். மேலும் இது, நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களைக் கொண்ட ஒரு செயலகத்தின் உதவியுடன் செயல்படுவதாக அமையும்.

இது மட்டுமல்லாது, ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம், காலநிலை தூண்டலால் ஏற்படும் உடல்நல சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு வலிமையான, முற்போக்கு சிந்தனை அணுகுமுறையாக அமையும். இது, ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை எதிர்கொள்வதற்கு தமிழ்நாட்டினை மேலும் ஆயத்தப்படுத்தும், மீள்தன்மையை அதிகரிப்பதோடு, நிலையான சுகாதார ஏற்பாட்டு முறைகளை ஊக்குவிக்கும். புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கைகளை வளர்ப்பதன் வாயிலாக, இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உருவாக்கும் முன்மாதிரி மையம்: ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைத்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Integrated Wellbeing ,Climate Center ,CHENNAI ,Department of People's Welfare and Family Welfare ,health secretary ,
× RELATED அரசு பள்ளி மாணவர் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்: தமிழ்நாடு அரசு