×

காளை மாட்டு சிலை அமைக்க நவ.27ல் உண்ணாவிரத போராட்டம்

 

காங்கயம், நவ.22: கரிய நிறம், கூரான கொம்புகள், மலையையொத்த திமில்கள், களிற்றிக்கீடான கம்பீர தோற்றம் என காண்போரை மிரளவைக்கும் காங்கயம் இன காளைகள் உலக பிரசித்தி பெற்றவை. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுகளில் தமது பிடிபடாத ஆற்றலினால் புகழ் சேர்ப்பவை இவ்வின காளைகள். கடும் வறட்சியையும் கூட தாங்கி குறைவான தீவனத்தை உட்கொண்டு சத்தான பாலைத்தரும் காங்கயம் இன மாடுகளை மணமுடிக்கும் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தருகின்ற வழக்கம் இன்றளவும் மேற்கு தமிழகத்தில் மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்திலுள்ள பெரும்பாலான நகரங்களின் அடையாளமாக அந்த பகுதி சார்ந்த பிரபலமான பொருட்கள் அடைமொழியாக காங்கயம் என்றாலே காளை மாடுகள் என்று அனைவரின் கவனத்திற்கும் வரும். காங்கயத்தின் முக்கிய இடமான காங்கயம் காவல் நிலைய ரவுண்டானாவின் காங்கயம் இன காளை மாட்டின் சிலைகள் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால், அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில் காங்கயம் பகுதி பொதுமக்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும் 27ம் தேதி காலை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு இணையவழி ஆதரவு சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில், தற்போது வரை 800 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

The post காளை மாட்டு சிலை அமைக்க நவ.27ல் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Fasting ,Kangayam ,Jallikattu ,Alankanallur ,Palamedu ,Avaniyapuram ,
× RELATED சிவன்மலையில் மின் மோட்டார் திருட்டு