×

முதல்வர் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்: திமுகவினர் உடனே சட்டப் பேரவை தேர்தல் பிரசார பணிகளை தொடங்க அறிவுரை

சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை கூட்டத்தில், ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திமுகவினர் உடனே சட்டப் பேரவை தேர்தல் பிரசார பணிகளை தொடங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதற்காகவும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கூட்டினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ேக.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி மற்றும் உயர்நிலை செயல்திட்ட குழுவில் உறுப்பினர்களாக உள்ள தயாநிதிமாறன், எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட 19 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேர்தல் வாக்குறுதியில், சொன்னதை எல்லாம் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் அடுத்தடுத்து நிறைவேற்றி, மக்களுக்காகவே, மக்கள் அரசை நடத்தி வரும் நிர்வாகத் திறமைமிக்க தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு தனது பாராட்டை தெரிவிக்கிறது. ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்த உயர்நிலைத் செயல்திட்டக் குழு மனமாரப் பாராட்டுகிறது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்தி மாதம்- வாரம் என விழா எடுப்பது, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வக்ப் வாரிய திருத்தச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், இடஒதுக்கீட்டினை ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகு பறிமுதல் ஆகியவற்றுக்கு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது ஒன்றிய பாஜ அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மணிப்பூர் மாநிலத்தை ஒன்றிய பாஜ அரசு திரும்பிப் பார்க்க கூட நேரமின்றித் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. மேலும், இதுவரை பிரதமர் மோடி அவர்கள் ஒரு முறை கூட மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லாதது கண்டிக்கத்தக்கது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மனிதநேயம் உயிர்பெற ஒன்றிய பாஜ அரசு, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்திட வேண்டும். ‘ஒன்றிய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும், ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும் என்பது உள்ளிட்ட ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்து, இன்றைக்கு 16வது நிதிக்குழுவின் தலைவர் தமிழ்நாடு அரசின் சார்பில் மாஸ்டர்கிளஸ் பிரசென்ட்டேஷன் செய்யப்பட்டிருக்கிறது என முதல்வர் தலைமையிலான நிர்வாகத் திறன் மிக்க அரசை பாராட்டியிருப்பதை பெருமிதத்துடன் இந்த கூட்டம் பதிவு செய்கிறது.

தமிழ்நாட்டின் கோரிக்கைகள் 16வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்றும், அதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். திமுக அரசின் சாதனைகள், திட்டங்கள், முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று திமுகவினர் அனைவரையும் இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்குங்கள். 7வது முறையும் ஏற்றம் காண்போம் என்று கோடிக்கணக்கான தொண்டர்களது உள்ளத்துக்கு அன்பான வேண்டுகோளை இந்த கூட்டம் முன்வைக்கிறது என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், இடஒதுக்கீட்டினை முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post முதல்வர் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்: திமுகவினர் உடனே சட்டப் பேரவை தேர்தல் பிரசார பணிகளை தொடங்க அறிவுரை appeared first on Dinakaran.

Tags : DMK High Level Action Plan Committee ,Chief Minister ,Union Government ,DMK ,Legislative Assembly ,CHENNAI ,Union BJP government ,Assembly ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற...