×

ஆந்திர துணை முதல்வரை சந்திக்க அனுமதி கோரி நிர்வாணமாக பெண் அகோரி சாலை மறியல்

திருமலை: பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாணிடம் வலியுறுத்த அவரை சந்திக்க வேண்டும் எனக்கோரி பெண் அகோரி ஒருவர் நிர்வாண கோலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் 30 வயதுள்ள பெண் அகோரி. இவர் நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு, உத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டு, கையில் திரிசூலத்துடன் பல கோயில்களுக்கு சென்று வருகிறார். அவ்வாறு செல்லும் இடங்களில் இவர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வரான நடிகர் பவன்கல்யாணை சந்தித்து பேச நேற்று விஜயவாடா-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலை மங்களகிரி அருகே உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் போலீசார், நிர்வாணமாக வந்த பெண் அகோரியை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண் அகோரி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று பெண் அகோரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்காததால் அவரை போலீசார் தங்களது ஜீப்பில் அழைத்துச் செல்ல முயன்றனர்.

ஆனால் பெண் அகோரி, போலீசாரை தாக்கிவிட்டு சாலை மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். இதனையடுத்து பெண் போலீசார், அவரது கை, கால்களை கட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று பவன்கல்யாணை சந்தித்து வலியுறுத்த பெண் அகோரி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சமாதானம் செய்த போலீசார் சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

The post ஆந்திர துணை முதல்வரை சந்திக்க அனுமதி கோரி நிர்வாணமாக பெண் அகோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Andhra Deputy Chief Minister ,Tirumala ,Akhori ,Nirvana Kolam ,Pawan Kalyan ,Agori ,Telangana ,Deputy Chief Minister ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்