×
Saravana Stores

டெல்டாவில் விடிய விடிய மழை: 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின


திருச்சி: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வயல்களில் மழைநீர் சூழ்ந்ததால் தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் நடப்பட்ட 500 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கின. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணியில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மழை பெய்தது. புதுக்கோட்டை மாநகரில் நேற்று மாலை முதல் இரவு வரை தூறல் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி, மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் மழை பெய்தது. திருச்சி மாநகரில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை தூறல் மழை பெய்தது. டெல்டாவில் தொடர் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

அம்மாபேட்டை, புத்தூர் சாலியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாற்று நட்டு சுமார் 30 நாட்களே ஆன 500 ஏக்கரில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. தொடர்ந்து மழை நீர் வடியாததால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேதாரண்யத்தில் பெய்த பலத்த மழையால் ஆறுகாட்டுத்துறை கீழத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூரை சேர்ந்த விவசாய தொழிலாளி சின்னப்பாவின்(60) கான்கிரீட் வீடு நேற்று இடிந்து விழுந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி செம்பியமங்கலத்தை சேர்ந்த வசந்தா என்பவரின் கூரை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டார்.

The post டெல்டாவில் விடிய விடிய மழை: 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின appeared first on Dinakaran.

Tags : Delta ,Trichy ,Thanjavur ,Kumarikadal ,Dinakaran ,
× RELATED டெல்டாவில் மழை நீடிப்பு; 3,500 ஏக்கர் சம்பா மூழ்கியது: மீனவர்கள் முடக்கம்