*ஆய்வு செய்த கலெக்டர் அறிவுறுத்தல்
ஆலங்காயம் : அரசின் சலுகைகள் கிடைக்க பால் உற்பத்தியை பெருக்கி ஆவின் நிறுவனத்தில் வழங்குங்கள் என பால் உற்பத்தியாளர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் தர்ப்பகராஜ் களஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நரசிங்கபுரம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, நரசிங்கபுரம் ஊராட்சியில் 5,000க்கும் அதிகமான பசு மாடுகள் வளர்க்கப்படுவதாகவும் அவற்றின் மூலம் மாதம் 15 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் நடைபெறுவதாகவும், அவை தனியார் நிறுவனங்களுக்கு செல்வதால் அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். எனவே, உற்பத்தியாகும் பாலை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் அலுவலர்களை உடனடியாக வரவழைத்து அந்நிறுவனத்தின் கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை அமைத்து பால் உற்பத்தியை பெருக்கி ஆவின் நிறுவனத்திற்கு வழங்கும்பட்சத்தில் விவசாயிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளை பெற முடியும் என கலெக்டர் கூறினார்.
பின்னர், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள சாலைகள், தெருவிளக்குகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள் துப்புரவு பணிகளை ஆய்வு செய்து பணியாளர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஆவின் பால் கொள்முதல் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பின்னர், நரசிங்கபுரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
The post அரசின் சலுகைகள் கிடைக்க பால் உற்பத்தியை பெருக்கி ஆவின் நிறுவனத்தில் வழங்குங்கள் appeared first on Dinakaran.