×

மாமல்லபுரத்தில் 14 ஆண்டுகளாக காட்சிப்பொருளான மகளிர் சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாக மையம் கடந்த 14 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனை, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு, கடந்த 14 ஆண்டுக்கு முன் கிராம பெண்கள் பயன்படுத்துவதற்காக குழிப்பாந்தண்டலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், வளவந்தாங்கல் செல்லும் சாலையையொட்டி ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து 14 ஆண்டுகளை கடந்தும், பயன்படுத்த முடியாதபடி பூட்டியே கிடக்கிறது. அப்பகுதி, பெண்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று, சுகாதாரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு தற்போது, கட்டிடம் பயன்படாமல் கிடப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டும் காணாதது போல் இருப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்னும் அந்த சுகாதார வளாகத்துக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. மின் இணைப்பு கொடுத்தவுடன் இந்த சுகாதார வளாகம் திறக்கப்படும் என்றனர். எனவே, உடனடியாக மின் இணைப்பு பெற்று கட்டி முடிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சுகாதார வளாகத்தை விரைவில் பெண்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post மாமல்லபுரத்தில் 14 ஆண்டுகளாக காட்சிப்பொருளான மகளிர் சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Women's Health Complex ,Mamallapuram ,Integrated Women's Health Complex Center ,Kulippanthandalam ,Thirukkalukkunram ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...