×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து பாகன், உறவினர் பலி: பரிகார பூஜைக்கு பின்் நடை திறப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகனும், அவரது உறவினரும் உயிரிழந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 26 வயது தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. இந்த யானைக்கு ராஜகோபுரம் பகுதியில் தங்குவதற்கு குடில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிலில் சிறிய அளவிலான வலைகள் அமைக்கப்பட்டு பாகன்கள் மூலமாக மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. யானை பாகன்களாக ராதாகிருஷ்ணன் (57), அவரது உறவினர்களும், சகோதரர்களுமான செந்தில்குமார் (47), உதயகுமார் (46) ஆகியோர் உள்ளனர். நேற்று காலை வழக்கம்போல் ராதாகிருஷ்ணன், தெய்வானை யானைக்கு பகலில் உணவு வழங்கி உள்ளார். பின்னர் அவர் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை 3 மணியளவில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பளுகலைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சிசுபாலன் (59) என்பவரும் யானை குடிலுக்கு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக யானை, சிசுபாலனை தும்பிக்கையால் கழுத்தை பிடித்து இறுக்கி தாக்கியுள்ளது. அவரை உதயகுமார் காப்பாற்ற முயன்றுள்ளார். அவரை யானை, தும்பிக்கையால் தள்ளி விட்டதில் உதயகுமார் தலையில் காயம் ஏற்பட்டது.

பின்னர் இருவரையும் கால்களால் மிதித்ததில் பலத்த காயமடைந்து மயங்கினர். தகவலறிந்து வந்த பாகன் ராதாகிருஷ்ணன், பணியாளர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். யானை தாக்கி பாகன், உறவினர் உயிரிழந்த தகவல் திருச்செந்தூர் பகுதியில் காட்டுத்தீயாக பரவியதால் அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டனர். பாகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரிகார பூஜை: கோயில் வளாகத்தில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழந்ததையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து பாகன், உறவினர் பலி: பரிகார பூஜைக்கு பின்் நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Murugan ,Tiruchendur ,Bagan ,Tiruchendur Subramania Swamy Temple ,Deivanai ,Rajagopuram ,Parikara Pooja ,
× RELATED கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகனை வீட்டில் இருந்தே வழிபடும் முறை..!!