×
Saravana Stores

காலதாமதமாக நிரந்தரம் செய்ததால் சிக்கல் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி பல்கலை. ஊழியர் வழக்கு: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தில் தனது பெயரை சேர்க்க கோரி காலதாமதமாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர் தொடர்ந்த வழக்கில் அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த ஜி.நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆய்வக தொழில்நுட்ப ஊழியராக கடந்த 2000ம் ஆண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியில் சேர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் பணி முடிந்ததும், என்னை 2002ம் ஆண்டு ஜூலை 28ந்தேதி பணியி நிரந்தரம் செய்திருக்கவேண்டும். ஆனால், காலதாமதமாக 2003ம் ஆண்டு செப்டம்பர் 24ந்தேதிதான் பணிநிரந்தரம் செய்தனர். இதற்கிடையில், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முன்தேதியிட்டு அமல்படுத்துவதாக 2003ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பாகவே எனக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டதால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் என் பெயரை சேர்க்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.காசிநாதபாரதி ஆஜராகி, பண பலன்களை முன்தேதியிட்டு ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் புதிய கோரிக்கை மனுவை அரசுக்கு கொடுக்கவேண்டும். அந்த மனுவை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் 12 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post காலதாமதமாக நிரந்தரம் செய்ததால் சிக்கல் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி பல்கலை. ஊழியர் வழக்கு: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Govt ,CHENNAI ,Madras High Court ,G. Nagarajan ,Chidambaram ,Court ,Dinakaran ,
× RELATED சாட்சியம் அளிக்க நீதிமன்றம் வருகிறார் எடப்பாடி..!!