×
Saravana Stores

மரணமடைந்த வழக்கறிஞர்கள் குடும்ப நல நிதியை விரைவில் வழங்க கோரி வழக்கு: பார்கவுன்சில் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வழக்கறிஞர்கள் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழக்கறிஞர் நல நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு பார்கவுன்சில் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் எம்.வரதன் தாக்கல் செய்த மனுவில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த 1987ல் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி 1987ல் வழக்கறிஞர்கள் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் நல நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கறிஞர் நல நிதியை கடந்த 2022 ஏப்ரல் 23ம் தேதி ரூ.10 லட்சமாக அறிவித்தார்.

ஆனால், இந்த தொகை மரணமடைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு செல்வதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து, மரணமடைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினரில் நிலை குறித்து தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் பார்கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் நடந்த பார்கவுன்சில் பொதுக்குழுவில் முதல்வரிடம் நிதி ஒதுக்கீடு கோர தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானம் முதல்வரின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், நல நிதி ஒதுக்குமாறு கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஜூன் 27ம் ேததி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.7 கோடியை நல நிதிக்கு ஒதுக்கியது. இதை தொடர்ந்து மேலும் ரூ.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், நல நிதி கோரிய 600 மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து கடந்த செப்டம்பர் 2ம் தேதி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். எனவே, மரணமடைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க கோரிய எங்கள் மனுவை பரிசீலிக்குமாறு தமிழ்நாடு பார்கவுன்சில் மற்றும் அகில இந்திய பார்கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழ்நாடு பார்கவுன்சில், அகில இந்திய பார்கவுன்சில் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

The post மரணமடைந்த வழக்கறிஞர்கள் குடும்ப நல நிதியை விரைவில் வழங்க கோரி வழக்கு: பார்கவுன்சில் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu Bar Council ,All India Bar Council ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குரங்கை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி