×

சிவகாசி சூப்பர் மார்க்கெட் பகுதியில் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

*டூவீலர்களை இஷ்டத்திற்கு நிறுத்துவதால் சிரமம்

சிவகாசி : சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் சாலையில் டூவீலர்கள் இஷ்டத்திற்கு நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

சிவகாசி மாநகரம் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. நகரின் முக்கிய சாலைகளான கீழ ரதவீதி, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, திருத்தங்கல் சாலை, மார்க்கெட் பகுதி ஆகிய சாலைகளில் நகைக்கடைகள், பரசரக்கு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.

போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த சாலையில் கார்கள், தள்ளுவண்டிகள் மற்றும் டூவீலர்கள் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் கார்கள், டூவீலர்கள், ஆம்புலன்ஸ், ஆட்டோ சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் வைத்தும், விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

குறிப்பாக சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதி சாலையில் ஏராளமான சூப்பர் மார்க்கெட் மற்றும் வர்த்தக கடைகள் இருப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வந்த டூவீலர்களை இஷ்டத்திற்கு சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் மார்க்கெட் சாலை பல்வேறு வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியாக மாறியுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சூப்பர் மார்க்கெட் மற்றும் வர்த்தக கடை உரிமையாளர்கள் இஷ்டத்திற்கு சாலையில் வாகனங்களை நிறுத்தி லோடு இறக்குகின்றனர். எனவே அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு சாலையோரம் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post சிவகாசி சூப்பர் மார்க்கெட் பகுதியில் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Ishta ,Sivakasi Anna Vegetable Market Road ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்