×

டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தருவது குற்றமாக அமையாது: இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தருவது குற்றமாக அமையாது என்று கூறி ஐகோர்ட் கிளை, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் மீது காதலிக்கு முத்தம் தந்ததாக கூறி, போலீஸ் தரப்பில் வழக்கு பதிந்துள்ளதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் வயது 20. இவரும், 19 வயதான இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். அப்போது தனது காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததாகவும், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில், காதலிக்கும் இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் எந்த விதத்திலும், இந்திய தண்டனை சட்டம் 354-ஏ(1)(ஐ) பிரிவின் கீழ் குற்றமாக அமையாது. எனவே, மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, மனுதாரர் மீது நடவடிக்கைகளை தொடர்வது, சட்ட துஷ்பிரயோகமாக அமையும். இந்த வழக்கில் ஏற்கனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், போலீசார் விசாரணையை முடித்து திருவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். எனவே, மனுதாரர் மீதான இந்த வழக்கையும், வழக்கு தொடர்பான தொடர் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து முத்தம் தருவது குற்றமாக அமையாது: இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Icourt branch ,Madurai ,Thoothukudi ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி