×

ஹெலிகாப்டரில் ராவத் உட்பட 11 பேர் பலி மோசமான வானிலையால் விபத்து நடந்திருக்க வாய்ப்பு: 5 நாளில் விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்புக்கு காரணமான
ஹெலிகாப்டர் விபத்து, மோசமான வானிலை காரணமாக நடந்திருக்கலாம் என
கருதப்படுகிறது. குன்னூரில் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர்
விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி, உயர் ராணுவ
அதிகாரிகள் உட்பட 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விமானப்படையை
சேர்ந்த ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையிலான முப்படை நிபுணர் குழு
விசாரித்து முடித்துள்ளது. இது, விபத்துக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில்
விசாரித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு, மனித தவறு, மோசமான வானிலை
போன்றவையும் இதில் அடங்கும்.இந்நிலையில், இக்குழு தனது விசாரணையை
முடித்து அறிக்கையை இறுதி செய்து வருவதாகவும், விமானப்படை தளபதி
சவுதாரியிடம் 5 நாட்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்,
ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் சிக்கிய எம்ஐ-17வி5 ராணுவ
ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. விவிஐபி.க்களின் பாதுகாப்புக்கு
மிகவும் நம்பகமானது. தொழில்நுட்ப கோளாறுகள் எவ்வளவு எளிதில் ஏற்படுவதற்கான
வாய்ப்புகளே இல்லாதது. அப்படியே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டாலும், தானாகவே
மாற்று தொழில்நுட்பத்தில் இயங்கி பறக்கக் கூடியது. நிபுணர் குழுவின்
விசாரணையில், மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரிய
வந்திருப்பதாக தகவல் வௌியாகி இருக்கிறது. மோசமான வானிலையால் குழப்பம்
அடைந்த விமானி, திசை தெரியாமல் பறந்து மலையில் மோதி விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், அறிக்கையின் முழு
விவரம் வெளியான பிறகே அது தெரியவரும்….

The post ஹெலிகாப்டரில் ராவத் உட்பட 11 பேர் பலி மோசமான வானிலையால் விபத்து நடந்திருக்க வாய்ப்பு: 5 நாளில் விசாரணை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Rawat ,New Delhi ,Chief of Army Staff ,Bipin Rawat ,Dinakaran ,
× RELATED ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராவத் பாஜவில் தஞ்சம்