×

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அனைத்து மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 9ம் தேதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திர மீன்பிடி படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று (12ம் தேதி) நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

* கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்

The post இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,CM ,M.K.Stal ,Union Minister ,Chennai ,Nagapattinam ,Chief Minister ,M.K.Stalin ,Minister of External Affairs ,Nadu ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தொழிலை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை