×

தெங்குமரஹாடா கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஊட்டி : இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 9ம் தேதி தேசிய சட்ட சேவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் பகுதியாக நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்ட சேவைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தின் கடைகோடி கிராமமான தெங்குமரஹாடா கிராமத்தில் நடந்தது.

இம்முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் பங்கேற்று பேசியதாவது: சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரியப்படுத்தவும், அனைவருக்கும் குறிப்பாக நலிந்த பிரிவினருக்கு நீதியை உறுதிப்படுத்தவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்குவதற்கும், சச்சரவுகளை சுமூகமாக தீர்ப்பதற்கும் சட்ட உதவி மையம் உள்ளது. ஒவ்வொரு மாநிலம் முதல் வட்டம் வரை இலவச சட்ட உதவி மையம் உள்ளது. எனவே சட்டம் சம்பந்தமான சந்தேகங்களுக்கும், அதனை தீர்ப்பதற்கும் சட்ட உதவி மையம் மூலம் தீர்வு காணலாம்.

மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து அவற்றின் தகுதியை தீர்மானிப்பது, சிறைகளுக்கு வழக்கறிஞர்களை அனுப்பி, அங்குள்ள சிறைவாசிகளுக்கு சட்ட உதவி வழங்குதல், சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்தி கிராம மற்றும் பாமர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோர், பட்டியல் பழங்குடியினர், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23ல் குறிப்பிட்ட மனிதர்களை விற்பதும், வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவதால் பாதிக்கப்பட்ட நபர், பிச்சை எடுப்பவர், பெண் அல்லது குழந்தை, ஊனமுற்றோர், பேரழிவு, இனவன் முறை, சாதி வன்கொடுமை, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் சட்ட உதவிகள் பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட, வட்ட அளவில் நீதிமன்ற வளாகங்களில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தெங்குமரஹாடா கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tengumarahada ,National Legal Services Day ,India ,Nilgiris District Legal Services Commission ,Kotagiri Circle ,Dinakaran ,
× RELATED காட்டு யானை தாக்கி பெண் பலி: சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்