×
Saravana Stores

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் மாநில அளவில் சாதித்த வீரர்களுக்கு பாராட்டு

*கேரம் விளையாட்டில் தங்க பதக்கம்

*கபாடி உள்ளிட்ட போட்டிகளிலும் சாதனை

திருவாரூர் : முதலமைச்சர் கோப்பைக்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற திருவாரூர் மாவட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலெக்டர் சாருஸ்ரீயை சந்திந்து வாழ்த்து பெற்றனர்.தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இந்த துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

இதனையொட்டி மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு சென்னையில் கார் பந்தயத்தினை நடத்தினர்.

உபகரணங்கள் வழங்கல்: மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு சார்பில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிரிக்கெட், வாலிபால், புட்பால், செஸ், கேரம். சிலம்பம், தடகளம், செட்டில் உள்ளிட்ட 33 வகையான விளையாட்டு உபகரணங்கள், டீ சர்ட்கள் மற்றும் பேக் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 430 ஊராட்சிகளுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.8 கோடியே 60 லட்சம் மதிப்பில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியானது அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகளாக 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டன.

மாவட்ட போட்டிகளில் பரிசு: திருவாரூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியானது, கடந்த செப்டம்பர் மாதம் 10ந் தேதி துவங்கி 24ந் தேதி வரையில் 5 பிரிவுகளாக நடைபெற்றது. இதில், மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையாக முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2ம் பரிசு ரூ,2 ஆயிரம், 3ம் பரிசு ரூ ஆயிரமும் அறிவிக்கப்பட்டு கபாடி, கூடைப்பந்து, வளைகோல்பந்து, மேசைப்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மற்றும் கோ-கோ, கேரம், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

அதில், மொத்தம் 12 ஆயிரத்து 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 26ந் தேதி வழங்கப்பட்டன. இதனையடுத்து, மாவட்ட அளவில் வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராகனைகள் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டனர். அதில், வெற்றிபெற்ற தனிநபர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ம் பரிசாக 75 ஆயிரம், 3ம் பரிசாக 50 ஆயிரமும், குழுபோட்டிகளுக்கு முதல் பரிசாக 75 ஆயிரம், 2ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு 25 ஆயிரம் வழங்கப்பட்டன.

மாநிலப்போட்டியில் தங்கம்: மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பள்ளிப்பிரிவில் கால்பந்து விளையாட்டில் மாணவிகள் வெண்கலப்பதக்கமும் மற்றும் குத்துச்சண்டை விளையாட்டில் வெண்கலப்பதக்கமும், கல்லூரிப் பிரிவில் மாணவிகள் கேரம் விளையாட்டில் தங்கப்பதக்கமும் மற்றும் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும், மாற்றுதிறனாளிகள் பிரிவில் இறகுப்பந்துப் போட்டியில் ஆண்களில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவிலும் வெண்கலப்பதக்கமும், மற்றும் பொதுப்பிரிவில் ஆண்கள் கபாடி விளையாட்டில் வெள்ளி பதக்கங்கள் பெற்றனர்.

இந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கலெக்டர் சாருஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சௌந்தர்ராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் மாநில அளவில் சாதித்த வீரர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup ,Carrom ,Kabaddi ,Thiruvarur ,Collector ,Sarusree ,Deputy ,Chief Minister ,Udayanidhistal ,Tamil Nadu ,
× RELATED முதலமைச்சர் கோப்பை போட்டியில்...