×

குந்தா புனல் மின் உற்பத்தி நிலைய பணிக்காக எமரால்டு அணையில் தண்ணீர் திறப்பு

*வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்

மஞ்சூர் : காட்டுக்குப்பை பகுதியில் நடைபெற்று வரும் குந்தா புனல் நீர் மின் உற்பத்தி நிலையப்பணிகளை முன்னிட்டு எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேறியது. மலை மாவட்டமான நீலகிரியில் குந்தா மற்றும் பைக்கார நீர் மின் திட்டங்களின் கீழ் 12நீர் மின்நிலையங்கள் இயங்கி வருகிறது.

அப்பர் பவானி, அவலாஞ்சி, கிளன்மார்கன், பைக்காரா, குந்தா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் மேற்படி மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சூழலில் மஞ்சூர் அருகே உள்ள காட்டுக்குப்பை பகுதியில் புதியதாக நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் சார்பில் ரூ.1, 850 கோடி மதிப்பீட்டில் மின் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த புதிய புனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் தலா 125 மெகாவாட் வீதம் மொத்தம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தினசரி 3 மில்லியன் யூனிட் என்ற வகையில் ஆண்டுக்கு சுமார் 1,095 மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். மின்நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட சில முக்கிய பணிகளை முன்னிட்டு எமரால்டு அணையில் உள்ள நீரை வெளியேற்ற மின்வாரிய தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை காலை ஊட்டி ஆர்டிஓ சதீஷ், குந்தா தாசில்தார் கலைச்செல்வி, குந்தா புனல் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தொடர்ந்து 30 நாட்களுக்கு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் எடக்காடு பிகுளி பாலம் வழியாக பாய்ந்தோடி குந்தா அணையை சென்றடைந்தது. அவலாஞ்சி அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையத்திற்கு வரும் நீர் மின்சார உற்பத்திக்கு பின் அணையில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில் எமரால்டு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரும் குந்தா அணையில் கலப்பதால் குந்தா அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 89 அடியை எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து அவலாஞ்சி அணையில் இருந்து குந்தா மின் நிலையத்திற்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதுடன் குந்தா மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேநேரத்தில் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழியாக கெத்தை மின்நிலையத்திற்கு கொண்டு செல்லும் நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கெத்தை, பரளி, பில்லூர் மின்நிலையங்களில் 24 மணி நேரமும் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post குந்தா புனல் மின் உற்பத்தி நிலைய பணிக்காக எமரால்டு அணையில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Emerald Dam ,Kunta Funal Power Plant ,Gunda Funal Hydropower Plant ,Katkuppai ,Dinakaran ,
× RELATED எமரால்டு அணையில் இருந்து வெளியேறிய...