மஞ்சூர்: எமரால்டு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் மண்ணரிப்பு ஏற்பட்டு கூட்டுக்குடிநீர் திட்ட பாலம் சரிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்கார நீர் மின் திட்டங்களின் கீழ் 12 நீர் மின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. அப்பர்பவானி, அவலாஞ்சி, கிளன்மார்கன், பைக்காரா, குந்தா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள காட்டுக்குப்பை பகுதியில் புதிதாக நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தின் சார்பில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் மின் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த புதிய புனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் தலா 125 மெகாவாட் வீதம் மொத்தம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்நிலைய பணிகளை முன்னிட்டு கடந்த 10ம் தேதி எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 8 நாட்களாக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எமரால்டு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர், குந்தா அணையில் கலப்பதால் குந்தா அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 89 அடியை எட்டியுள்ளது. மேலும், எமரால்டு அணை நீரில் அடித்து வரப்பட்ட கழிவுகளும் குந்தா அணையில் தேங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கழிவுகளை அகற்றுவதற்காக குந்தா அணையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறிய நீரின் மூலம் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேற வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு பாலத்தின் மேலாக குழாய்களில் குடிநீர் குன்னூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில், எமரால்டு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பாலத்தின் அடியில் சென்றதில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் சரிந்து விழுந்தது. இதில், பாலத்தின் மேல் இருந்த குழாய்களும் உடைந்து அதிலிருந்து தண்ணீர் அதிவேகமாக வெளியேறியது. குன்னூர் ராணுவ குடியிருப்பு பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதராமாக உள்ளதால் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
The post எமரால்டு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.