×
Saravana Stores

உரிமையாளர் வெளியே சென்றதை நோட்டமிட்டு பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருட்டு

*திருவட்டார் அருகே பரபரப்பு

குலசேகரம் : திருவட்டார் அருகே சவுண்ட் சர்வீஸ் கடையின் உரிமையாளர் வெளியே சென்றதை நோட்டமிட்ட 2 கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்து ஆம்பிளிபயரை திருடிக்கொண்டு தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த காட்சியை சிசிடிவி கேமராவில் பார்த்த உரிமையாளரின் மனைவி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
திருவட்டாரை அடுத்த பூவன்கோடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே வசித்து வருபவர் கிங்ஸ்லி (52). இவரது வீட்டையொட்டி ஒலி-ஒளி சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். பிரபலமான இந்த கடையில் ஆம்பிளிபயர், ஸ்பீக்கர்கள், சீரியல் செட்டுகள் உள்பட விலையுயர்ந்த உபகரணங்கள் ஏராளமாக உள்ளன.

நேற்றுமுன்தினம் மாலை சுமார் 3 மணியளவில் கிங்ஸ்லி கடைக்குள் இருந்தபோது அந்த வழியாக 2 வாலிபர்கள் பைக்கில் சுற்றித்திரிந்தனர். ஒருகட்டத்தில் கிங்ஸ்லி நடத்திவரும் கடையின் எதிர்ப்புறம் நின்று கொண்டு கடையை பார்த்தவாறு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றொரு நபர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். நீண்டநேரமாக அங்கு நின்று கொண்டிருந்ததால் கிங்ஸ்லிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் டிப்-டாப் உடையணிந்திருந்ததால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து கிங்ஸ்லி கடையில் இருந்து பக்கத்தில் உள்ள வேறொரு கடைக்கு சென்றார்.

இதனை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவரும் உடனே பைக்கை எடுத்துக்கொண்டு கிங்ஸ்லியின் கடை அருகே வந்தனர். அதில் பைக்கை ஓட்டிய நபர் ஹெல்மெட்டை பின்னால் இருந்தவரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த நபர் ஹெல்மெட்டை வாங்கி தலையில் போட்டுக்கொண்டு கடைக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ஆம்பிளிபயரை அலேக்காக தூக்கிவிட்டு ஓடிவந்தார்.

இந்த காட்சி கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதே நேரத்தில் கிங்ஸ்லியின் வீட்டில் இருந்த மனைவி இந்த காட்சியை தனது வீட்டில் இருந்தவாறு பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து திருடன்… திருடன் என கூச்சலிட்டார்.அதற்குள் மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் ஏறி மின்னல்வேகத்தில் தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நாலாபுறமும் தேடிப்பார்த்தும் கொள்ளையர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து கிங்ஸ்லி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சவுண்ட் சர்வீஸ் கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உரிமையாளர் வெளியே சென்றதை நோட்டமிட்டு பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Panaparpu Kulasekaram ,Thiruvattar ,Sound Service ,Amphibian ,
× RELATED திருவட்டார் அருகே எம்.சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல்